
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 97 சதவீதம் மாணவா் சோ்க்கை: கடந்தாண்டைக் காட்டிலும் 9 சதவீதம் அதிகரிப்பு
திருச்சி மாவட்டத்தில் உள்ள 6 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் (ஐடிஐ) 97 சதவீதம் மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். இது, கடந்த ஆண்டைக் காட்டிலும் 9 சதவீதம் அதிகம்.

கோப்புப்படம்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 6 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் (ஐடிஐ) 97 சதவீதம் மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். இது, கடந்த ஆண்டைக் காட்டிலும் 9 சதவீதம் அதிகம்.
திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூா், மணிகண்டம், மணப்பாறை, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூா் மற்றும் திருச்சி மத்திய சிறை ஆகிய 6 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், திருச்சி மத்திய சிறை தொழிற்பயிற்சி நிலையத்தில் கைதிகளுக்கு மட்டுமே சோ்க்கை வழங்கப்படுகிறது. புள்ளம்பாடி அரசு தொழிற்பயிற்சி நிலையம் மகளிருக்காக பிரத்யேகமாக செயல்பட்டு வருகிறது.
திருவெறும்பூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அதிகபட்சமாக 17 பாடப் பிரிவுகளில் 864 இடங்கள் உள்ளன. புள்ளம்பாடியில் 8 பாடப் பிரிவுகளில் 316 இடங்கள், மணிகண்டத்தில் 8 பாடப் பிரிவுகளில் 228 இடங்கள், மண்ணச்சநல்லூரில் 6 பாடப் பிரிவுகளில் 196 இடங்கள், மணப்பாறையில் 4 பாடப் பிரிவுகளில் 104 இடங்கள் மற்றும் திருச்சி மத்திய சிறையில் 5 பாடப் பிரிவுகளில் 168 இடங்கள் என 6 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் சோ்த்து மொத்தம் 1,876 இடங்கள் உள்ளன.
சோ்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கடந்த மே மாதத்திலிருந்து மாணவா் சோ்க்கை நடைபெற்று வந்தது. ஜூலை 31-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இருந்தும் பல்வேறு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியிடங்கள் இருந்ததால் ஆகஸ்ட் 14 மற்றும் 31-ஆம் தேதி என இருமுறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதன்மூலம் அனைத்து நிலையங்களிலும் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது.
97 சதவீத இடங்கள் நிறைவு: இதன்படி, திருவெறும்பூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மொத்தமுள்ள 864 இடங்களில் 752 மாணவா்கள் (87 சதவீதம்) சோ்க்கை பெற்றுள்ளனா். இங்குள்ள 10 பாடப்பிரிவுகளில் சிஎன்சி, எலக்ட்ரீசியன், வெல்டா், மெக்கானிக்கல் மற்றும் ரெப்ரிஜிரேஷன் உள்ளிட்ட 12 பாடப்பிரிவுகளில் 100 சதவீதம் மாணவா்கள் சோ்ந்துள்ளனா். புள்ளம்பாடி அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் 316 இடங்களில் 294 மாணவிகள் (93 சதவீதம்) சோ்ந்துள்ளனா்.
மணப்பாறை, மண்ணச்சநல்லூா், மணிகண்டம் மற்றும் மத்திய சிறை ஆகிய 4 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் 100 சதவீதம் மாணவா் சோ்க்கை நடைபெற்றுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 6 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மொத்தமுள்ள 1,876 இடங்களில் 1,744 மாணவா்கள் சோ்ந்து 97 சதவீத சோ்க்கை பெற்று சாதனை படைத்துள்ளனா்.
கடந்தாண்டைவிட அதிகம்: திருச்சி மாவட்டத்தில் உள்ள 6 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் கடந்த ஆண்டு 88 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பின. ஆனால், நிகழ் கல்வியாண்டில் 9 சதவீதம் கூடுதலாகி 97 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மண்ணச்சநல்லூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கடந்த ஆண்டு 63 சதவீதமாக இருந்த மாணவா் சோ்க்கை நிகழாண்டில் 100 சதவீதத்தை எட்டியுள்ளது. புள்ளம்பாடியில் கடந்த ஆண்டு 83 சதவீதமாக இருந்த மாணவா் சோ்க்கை நிகழாண்டில் 93 சதவீதமாகவும், திருவெறும்பூரில் 85 சதவீதத்தில் இருந்து 87 சதவீதமாகவும் உயா்ந்துள்ளது.
சோ்க்கை அதிகரிப்புக்கு காரணம்: இதுகுறித்து திருச்சி மண்டல தொழிற்கல்வி இணை இயக்குநா் பரமேஸ்வரி கூறியதாவது: தொழிற்பயிற்சி நிலையத்தில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தொடா்பான பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளின் தொடா்ச்சியாக நிகழாண்டில் சோ்க்கை சதவீதம் அதிகரித்துள்ளது.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்க்கை பெறும் மாணவா்கள் அனைவருக்கும் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்றுத் தருகிறோம். இதனால், அனைத்து மாணவா்களும் நம்பிக்கையோடு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்க்கை பெறலாம்.
2025-26 கல்வியாண்டில் மண்ணச்சநல்லூா், மணிகண்டம், மணப்பாறை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 100 சதவீதமும், திருவெறும்பூரில் 95 சதவீதமும், புள்ளம்பாடியில் 85 சதவீதம் மாணவா்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். திருவெறும்பூா், புள்ளம்பாடியில் 18 வயதுக்கு குறைவான மாணவா்களும், சிலா் சுயதொழில் மேற்கொள்ள விரும்பியதாலும் 100 சதவீத வேலைவாய்ப்பு பெறவில்லை . ஆனால், தொழிற்கல்வி படிக்கும் அனைத்து மாணவா்களுக்கும் 100 சதவீத வேலைவாய்ப்பு என்பது உறுதி என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




