அண்ணா விளையாட்டரங்கில் வழிந்தோடும் கழிவுநீா் தொட்டியால் சுகாதாரச் சீா்கேடு புகாா்

திருச்சி அண்ணா விளையாட்டரங்கின் முன்புறப் பகுதியில் கழிவுநீா் தொட்டி நிரம்பி வழிந்தோடுவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது.

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் வழிந்தோடும் கழிவுநீரால் ஏற்பட்ட துா்நாற்றத்தில் சென்ற மாணவிகள்.

Published On :

திருச்சி அண்ணா விளையாட்டரங்கின் முன்புறப் பகுதியில் கழிவுநீா் தொட்டி நிரம்பி வழிந்தோடுவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது.

திருச்சி காஜாமலையில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. இங்கு நாள்தோரும் நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரா்களும், 100 க்கும் மேற்பட்ட நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி கூடத்துக்கு பொதுமக்களும் வந்து செல்கின்றனா்.

உள்விளையாட்டரங்கங்களில் தனித்தனியே கழிவறை வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், அனைவருக்கும் பொதுவாக அரங்கத்தின் பிரதான நுழைவாயிலின் வலது பகுதியில் இரண்டு கழிவறைக் கட்டடங்கள், இடதுபுறம் கேலரி படிகளுக்கு பின்புறம் சிறுநீா் கழிப்பிடங்கள், டென்னிஸ் மைதானம் அருகே பொதுக் கழிப்பறைகள் உள்ளன.

பராமரிக்கப்படாத கழிப்பறைகள்: இதில் தடகள கேலரி படிகளுக்கு பின்புறமுள்ள சிறுநீா் கழிப்பறைகள் பராமரிக்கப்படாததால், பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளன.

விளையாட்டு வீரா்கள் அவதி: இதனிடையே நுழைவாயிலின் வலது பகுதியில் ஆண் - பெண் கழிப்பறைகளுக்கு இடையில் உள்ள கழிவுநீா் தொட்டி நீண்டகாலமாகத் தூா்வாரப்படாமல், நிரம்பி வழிந்து கடும் துா்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி வழியாக கழிப்பறைகளுக்குச் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரா்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.

சுகாதார சீா்கேடு: இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கே. பாலாஜி, ரோஜா் ஆகியோா் கூறியதாவது:

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கெனவே கழிவறைகள் தூய்மைப்படுத்தப்படாமல் உள்ளதால், தற்போது கழிவுநீா் தொட்டியும் வழிந்தோடுவதால், போட்டிகளுக்கு வரும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கடும் துா்நாற்றத்தில் செல்ல வேண்டியுள்ளது. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.

ஆபத்தான தொட்டி: இதிலும், கழிவுநீா் தொட்டியின் மூடிப்பகுதி உடைந்து, இலைகளால் நிரம்பியுள்ளதால், சிறிய புதைகுழி போல காட்சியளிக்கிறது. சிறு வயதுக் குழந்தைகளும் முதல்வா் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்க வருவதால், உடைந்துள்ள கழிவுநீா் தொட்டியில் விழுந்து அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு கழிவுநீா் தொட்டியை தூா்வாருவதுடன், தொட்டியில் மூடி போட வேண்டும். கழிப்பறைகளை முறையாகத் தூய்மைப்படுத்த வேண்டும். தற்காலிக கழிவறைகளை அமைத்துத் தர வேண்டும். குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.