நீர் வளம் இல்லை, தொழில் வளம் இல்லை: குடிபெயரும் தருமபுரி மாவட்ட மக்கள்

தருமபுரி, மே 6: தருமபுரி மாவட்டத்தில் போதிய நீர் வளம், தொழில் வளம்  இல்லாததால் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்லுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த 4 ஆண
Updated on
2 min read

தருமபுரி, மே 6: தருமபுரி மாவட்டத்தில் போதிய நீர் வளம், தொழில் வளம்  இல்லாததால் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்லுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் விவசாயம் நசிந்துள்ளது. விவசாய சாகுபடிப் பரப்பில் 30 சதவீதம் தரிசாக மாறியுள்ளது. விவசாயத் தொழிலை செய்தவர்கள், வேறு தொழிலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், மைசூர் ஆகிய பகுதிகளுக்கு வேலைத் தேடி சென்றுவிட்டனர்.

மாவட்டத்தில் அதிகபட்சமாக பென்னாகரம், பாலக்கோடு, நல்லம்பள்ளி, அரூர் ஒன்றியங்களை சேர்ந்த 40 சதவிகிதம் விவசாயிகள், தங்கள் குழந்தைகளை இங்குள்ள உறவினர்களின் பாதுகாப்பில் தங்கவைத்துவிட்டு மனைவியுடன் பெங்களூரில் வேலை செய்துவருகின்றனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் இல்லாமல் உறவினர்கள் வீட்டில் தங்கி கல்வி பயின்றுவருவதாக முதன்மைக் கல்வி அலுவலர் ந. திருநாவுக்கரசு அண்மையில் தெரிவித்தார்.

இதனால் மாணவர்களின் கல்வித் தரம் மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

சமூகப் பாதுகாப்பு:

வேலைத் தேடி வெளி மாநிலங்களுக்கு செல்லும் குடும்பங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுவதில்லை. மேலும் இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த குடும்ப அட்டைகளும் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதனால் சமூக பாதுகாப்பு இல்லாமல் உள்நாட்டிலேயே அகதிகளாக மாற்றப்பட்டுள்ளனர். இத்தொழிலாளர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் குடிபெயர்ந்தோருக்கான உரிமை இயக்கத் தலைவர் தேவபேரின்பன் தெரிவித்தார்.

வெளி மாநிலங்களில் தங்கி வேலை செய்பவர்கள் விபத்துகளில் இறப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு மாதத்தில் பெங்களூரில் பணியின் போது இறந்தவர்கள் பென்னாகரத்தில் 3 பேர், நல்லம்பள்ளியில் ஒருவர், அரூரில் 2 பேர். கடந்த 9 மாதத்தில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 95 பேர், எய்ட்ஸô பாதிக்கப்பட்டவர்கள் 10 பேர். இரண்டாலும் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் 4 பேர்.

இது குறித்து பெங்களூரில் வேலை செய்யும் பென்னாகரத்தைச் சேர்ந்த சின்னசாமி கூறியது: பணி செய்யும் இடங்களில் எங்களுக்கு போதிய குடியிருப்புகள் இல்லை. இதனால் பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பு இல்லாத இடத்தில் தனியாக விட்டுவிட்டு வந்து வேலை செய்துவருகிறோம். எங்கள் குழந்தைகளை இங்குள்ள பள்ளிகளில் சேர்த்துகொள்ள மறுக்கின்றனர்.

வேலை தருபவர்களிடம் முன்பணம் பெற்றுகொள்வதால் அவர்கள் எங்களை கொத்தடிமைகளைப் போல நடத்துகின்றனர். போதிய பாதுகாப்பு இல்லாததால் இங்குள்ள போலீஸôர் சந்தேகத்தின் பேரில் எங்களை கைது செய்து வருகின்றனர் என்றார்.

  இது குறித்து அரூர் எம்எல்ஏ பி. டில்லிபாபு கூறியது:

மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சியை சமாளிக்கும் வகையில் விவசாயிகளுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை. குடிநீர் ஆதாரத்துக்கான கட்டமைப்பு வசதிகளையும் அரசு ஏற்படுத்தவில்லை. இதனால் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு குடிபெயருவது தொடர்கிறது. இதனால் மாவட்டத்தில் மனித வளம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் வகையில் அரூரில் உள்ள இயற்கை கனிம வளமான மாலிப்டினம் தொழிற்சாலையை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

தருமபுரி பகுதியில் சிப்காட் அமைப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் 200 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டும் இம்மாவட்டத்தில் சிப்காட் அமைப்பதற்கான எவ்வித அறிக்கையும் அரசு வெளியிடவில்லை என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com