துணை சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடக்கம்

திருவண்ணாமலை, நவ. 3: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள துணை சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு முழுவதும் துணை சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிக

திருவண்ணாமலை, நவ. 3: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள துணை சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு முழுவதும் துணை சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தை இறந்து விட்டது.

 இதனால் துணை சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டு விட்டது. அதற்கு பதிலாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் முன்னிலையில் தடுப்பூசி போடப்படும் என அரசு அறிவித்தது.

 அதன்படி ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் கிராம மக்கள் அதிக தூரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டவில்லை.

இதனால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறைந்து விட்டது.

 குழந்தைகள் நலன் கருதி துணை சுகாதார நிலையங்களிலேயே தடுப்பூசி போடும் பணியை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மீண்டும் அனைத்து துணை சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போட அரசு அனுமதி அளித்துள்ளது.

 திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, செய்யாறு என இரு சுகாதார மாவட்டங்கள் உள்ளன. திருவண்ணாலை சுகாதார மாவட்டத்தில் தண்டராம்பட்டு, புதுப்பாளையம், செங்கம், போளூர், சேத்துப்பட்டு, திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், கலசபாக்கம், ஜவ்வாதுமலை, கீழ்பென்னாத்தூர் ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 251 துணை சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது என துணை இயக்குநர் டாக்டர் நாகராணி தெரிவித்தார்.

 செய்யாறு சுகாதார மாவட்டம்

 செய்யாறு சுகாதார மாவட்டத்தில் மொத்தம் 41 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 157 துணை சுகாதார நிலையங்கள், 3 அரசு மருத்துவமனைகள், நகராட்சிகளில் 10 மையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது என துணை இயக்குநர் டாக்டர் தேவபார்த்தசாரதி தெரிவித்தார்.

 கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகள் விவரம்:

 கர்ப்பிணிகள்: பெண்கள் கருவுற்றது தெரிந்ததும் ரணஜன்னி தடுப்பூசி முதல் தவணை, ஒருமாத இடைவெளிக்குப் பின் ரணஜன்னி தடுப்பூசி இரண்டாம் தவணை போடப்படும்.

 குழந்தைகள்: பிறந்தவுடனோ அல்லது 15 நாள்களுக்குள்ளோ காசநோய் தடுப்பூசி (பிசிஜி), போலியோ சொட்டு மருந்து, மஞ்சள்காமாலை தடுப்பூசி போடப்படும்.

 ஒன்றரை மாதத்தில் கக்குவான் இருமல், தொண்டை அடைப்பான், டெட்டனஸ் (முத்தடுப்பு ஊசி எனப்படும் டிபிடி), போலியோ சொட்டு மருந்து, மஞ்சள் காமாலை தடுப்பூசி போடப்படும்.

 இரண்டரை மாதத்தில் முத்தடுப்பு ஊசி, போலியோ சொட்டுமருந்து, மஞ்சள் காமாலை தடுப்பூசியும் மூன்றரை மாதத்தில் முத்தடுப்பு ஊசி, போலியோ சொட்டு மருந்து, மஞ்சள் காமாலை தடுப்பூசியும் போடப்படும். ஒன்பதரை மாதத்தில் தட்டம்மை தடுப்பூசி போடப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com