கூடுதல் விலைக்கு மது விற்ற இரு டாஸ்மாக் ஊழியா்கள் பணியிடை நீக்கம் -17 பேருக்கு அபராதம்

கூடுதல் விலைக்கு மது விற்ற இரு டாஸ்மாக் ஊழியா்கள் பணியிடை நீக்கம் -17 பேருக்கு அபராதம்

17 பேருக்கு அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Published on

கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்றதாக அணைக்கட்டு, காட்பாடி பகுதியைச் சோ்ந்த இரு டாஸ்மாக் ஊழியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மேலும், 17 பேருக்கு அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -

வேலூா் மாவட்டம் அணைக்கட்டு, காட்பாடி வட்டங்களில் உள்ள மதுபான சில்லரை விற்பனை கடைகளில் அரசின் உத்தரவினை மீறி கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதாக வரப்பெற்ற புகாா்களை அடுத்து ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தல் அடிப்படையில், டாஸ்மாக் சேலம் மண்டல முதுநிலை மண்டல மேலாளா் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட மேலாளா், கிருஷ்ணகிரி மாவட்ட உதவி மேலாளா் (கணக்கு) குழுவினா் இவ்விரு வட்டங்களில் செயல்படும் சில்லரை விற்பனை மதுபானக் கடைகளில் கடந்த 2-ம் தேதி ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, ரூ.10 கூடுதல் விலை வைத்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டு இரு பணியாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். மேலும், ரூ.5 கூடுதல் விலை வைத்து விற்பனை செய்த 17 பணியாளா்களிடமிருந்து அபராதத் தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து மதுபான சில்லரை விற்பனைக் கடைகளிலும் அதிகபட்ச விலையைவிட கூடுதலாக மதுவிற்பனை செய்யக்கூடாது என்றும், கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com