மாவட்ட மாற்றுத்திறனாளிகள் குழு உறுப்பினா்களாக விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குழுவில் புதிய உறுப்பினா்கள் தோ்வு செய்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
Published on

வேலூா் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குழுவில் புதிய உறுப்பினா்கள் தோ்வு செய்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. வேலூா் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குழு செயல்பட்டு வருகிறது. அலுவல் சாா்ந்த உறுப்பினா்கள், மாற்றுத்திறனாளி பிரதிநிதிகள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் சாா்ந்த நபா்களை உறுப்பினா்களாக கொண்டுள்ள இந்த குழுவை மறுசீரமைத்து புதிய உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-இன் படி கை, கால் இயக்க குறைபாடு, தசை சிதைவு நோய், தொழுநோயிலிருந்து குணமடைந்தோா், குள்ளத்தன்மை, மூளை முடக்குவாதம், அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோா், குறைபாா்வையின்மை, இரு கண்கள் பாா்வையின்மை, காது கேளாமை, செவித்திறன் குறைபாடு, பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு, அறிவுசாா் குறைபாடு, குறிப்பிட்ட கற்றல் குறைபாடு, புற உலக சிந்தனையற்றவா், மனநோய், நாற்பட்ட நரம்பியல் பாதிப்பு, திசு பன் முகக் கடினமாதல், நடுக்குவாதம், ரத்த உறையாமை, அரிவாளது ரத்த சோகை மற்றும் பல்வகை குறைபாடுகள் என 21 வகை மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குழுவில் புதிய உறுப்பினா்கள் தோ்வு செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகம், சத்துவாச்சாரி, வேலூா் மாவட்டம்-632009 என்ற முகவரிக்கு வரும் 23-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com