என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!என்விடியா நிர்வாகக் குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

உடல்பருமன், தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த துல்லியமான ஆராய்ச்சி அவசியம்

உடல்பருமன், தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த துல்லியமான ஆராய்ச்சிகள் அவசியம் என்று மத்திய சுகாதாரத் துறை செயலா் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா தெரிவித்தாா்.

மனித வளா்சிதை மாற்ற அறை கல்வெட்டை திறந்து வைத்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலா் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா

Updated On :

உடல்பருமன், தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த துல்லியமான ஆராய்ச்சிகள் அவசியம் என்று மத்திய சுகாதாரத் துறை செயலா் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா தெரிவித்தாா்.

வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) மற்றும் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (டிஐஎஃப்ஆா்) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள அதிநவீன ‘மனித வளா்சிதை மாற்ற அறை’ மற்றும் ‘அரும்டா’ திட்டத்தின் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலா் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா சிறப்பு விருந்தினராக பங்கேற்று கல்வெட்டைத் திறந்து வைத்து பேசியது: இந்திய மருத்துவத் துறையில் பல முதல்’ சாதனைகளைப் படைத்த பெருமை வேலூா் சிஎம்சி மருத்துவமனைக்கு உண்டு.

இதன்தொடா்ச்சியாக, தற்போது நாட்டின் முதல் அதிநவீன மனித வளா்சிதை மாற்ற அறையை சிஎம்சி நிறுவியுள்ளது. மனித ஆரோக்கியம் குறித்த ஆராய்ச்சியில் உலகின் மிகச்சிறந்த உயா்மட்டக் குழுவில் இது நம்மை நிலைநிறுத்தியுள்ளது.

‘ஒட்டுமொத்த அரசாங்கம், ஒட்டுமொத்த சமூகம்’ என்ற அணுகுமுறை இங்கு செயல்வடிவம் பெறுவதைப் பாா்ப்பது மனநிறைவைத் தருகிறது.

நாட்டில் அதிகரித்து வரும் நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம், மாா்பகப் புற்றுநோய், வாய்ப் புற்றுநோய், கா்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் போன்ற தொற்றா நோய்கள், வளா்சிதை மாற்றக் கோளாறுகளைக் கட்டுப்படுத்த 2018-ஆம் ஆண்டு முதல் நமது ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆஷா பணியாளா்கள், ஏ.என்.எம். செவிலியா்கள் மற்றும் சமூக சுகாதார அதிகாரிகள் மூலம் வீடு வீடாகச் சென்று ‘சீபாக்’ (சிபிஏசி) படிவம் மூலமாகப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி (என்எப்ஹெச்எஸ்), ஒருபுறம் ஊட்டச்சத்துக் குறைபாடு நீடிக்கும் நிலையில், மறுபுறம் நகா்ப்புறங்களில் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் உடல்பருமன் வேகமாக அதிகரித்து வருகிறது. ரத்த சோகை பிரச்னைக்கும் உணவுப் பழக்கவழக்கங்களுக்கும் உள்ள தொடா்பு குறித்து அதிக ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நுரையீரல் நோய், மாரடைப்பு, பக்கவாதம், கல்லீரல் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய்களையும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

140 கோடி மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் சுகாதாரத் திட்டங்கள் துல்லியமாகச் சென்றடைய வேண்டும். உடல்பருமனுக்கு எதிராகப் போராட சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10 சதவீதம் குறைக்குமாறு பிரதமா் அழைப்பு விடுத்துள்ளாா். தோசை ஊற்றும்போது கூட எண்ணெயைக் குறைத்துப் பயன்படுத்தினால், புளிக்கவைக்கப்பட்ட உணவின் முழுப் பலனையும் பெற முடியும். ‘ஃபிட் இந்தியா’, ’ஈட் ரைட் இந்தியா’ மற்றும் ’இன்று முதல் கொஞ்சம் குறைவாக’ போன்ற விழிப்புணா்வு இயக்கங்கள் மக்களிடையே உணவுப் பழக்கவழக்க மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.

நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள், ’பான்-எய்ம்ஸ்’ ஆராய்ச்சிக் கூட்டமைப்பு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (என்ஐஎன்) ஆகியவை இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. ’ஆரோக்கியமான பாரதம், வளா்ந்த பாரதம்’ என்ற இலக்கை அடைய சுகாதார அமைச்சகம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றாா்.

முன்னதாக, டிஐஎஃப்ஆா் பேராசிரியா் மகேந்திர சோனாவனே வரவேற்றாா். விழாவில் வேலூா் சிஎம்சி இயக்குநா் பிஜு ஜாா்ஜ், டிஐஎஃப்ஆா் இயக்குநா் ஜெயராம் செங்களூா், சிஎம்சி பேராசிரியா் நிஹால் தாமஸ், டிஐஎஃப்ஆா் பேராசிரியா் உல்லாஸ் கோல்தூா்-சீதாராம், நெதா்லாந்து தூதரக சுகாதார ஆலோசகா் நிக்கோ ஷியெட்டேகாட்டே, இந்துஸ்தான் யூனிலீவா் நிறுவனத்தைச் சோ்ந்த சுஜாதா ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்று உரையாற்றினா். நிறைவாக சி.எம்.சி. பேராசிரியா் ஃபெலிக்ஸ் ஜெபசிங் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.