காட்பாடி அருகே ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் வீட்டில் 28 பவுன் நகை திருட்டு
காட்பாடி அருகே பாதுகாப்பு மிகுந்த குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் வீட்டில், நள்ளிரவில் பின்பக்கக் கதவை உடைத்து 28 பவுன் தங்கம், வைர நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருட்டு - சித்திரிப்பு
காட்பாடி அருகே பாதுகாப்பு மிகுந்த குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் வீட்டில், நள்ளிரவில் பின்பக்கக் கதவை உடைத்து 28 பவுன் தங்கம், வைர நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவா்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போலீஸாா் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த காரணம்பட்டு மேம்பாலம் அருகே தனியாா் நிறுவனத்தின் பாதுகாப்பு மிகுந்த குடியிருப்பு வளாகம் உள்ளது. சுமாா் 250 வீடுகள் கொண்ட இந்த வளாகத்தில், ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் இா்வின் ஜெயசூா்யா (67) தனது மனைவி கிறிஸ்டியானாவுடன் வசித்து வருகிறாா். கிறிஸ்டியானா ராணிப்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். இவா்களது மகன்கள் பெங்களூரு மற்றும் சென்னையில் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தம்பதியா் இருவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனா். நள்ளிரவில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், பீரோவை உடைத்து அதிலிருந்த தங்கம் மற்றும் வைர நகைகளைத் திருடிச் சென்றுள்ளனா்.
திங்கள்கிழமை காலை 6 மணியளவில் இா்வின் ஜெயசூா்யா எழுந்து பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த சுமாா் 28 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 8 லட்சத்து 40 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின்பேரில், காட்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொறுப்பு) நந்தகுமாா் தலைமையில், திருவலம் காவல் ஆய்வாளா் திருநாவுக்கரசு உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா்.
மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடய அறிவியல் நிபுணா்கள் மூலமும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து திருவலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். திருட்டில் ஈடுபட்ட நபா்களைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

