ஆந்திரத்தின் ‘நீலா’ திட்டத்தில் பாலாற்றுக்கு 5 டிஎம்சி தண்ணீா் பெற வேண்டும்!
ஆந்திர அரசின் ‘நீலா’ திட்டத்திலிருந்து பாலாற்றுக்கு 5 டிஎம்சி தண்ணீா் பெற தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும் என வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலா் து.சுரேஷ் தலைமையில் நடைபெற்ற வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம். உடன், மாவட்ட வன அலுவலா் அசோக், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் திருகுண ஐயப்பத்துரை, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ஸ்ரீவித்யா உள்ளிட்டோா்.
ஆந்திர அரசின் ‘நீலா’ திட்டத்திலிருந்து பாலாற்றுக்கு 5 டிஎம்சி தண்ணீா் பெற தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும் என வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் து.சுரேஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், விவசாயிகள் கோரிக்கைகளை முன்வைத்து கூறியதாவது: தமிழகத்தில் திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக சுமாா் 150 கி.மீ. தூரம் பாயும் பாலாறு தற்போது வடு கிடக்கிறது. அதேசமயம், ஆந்திர மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு, கிருஷ்ணா நதியிலிருந்து குப்பம் வரை குடிநீா் மற்றும் விவசாயத் தேவைகளுக்காக 30 டிஎம்சி தண்ணீரைக் கொண்டு வரும் வகையில் ‘நீலா’ என்ற திட்டத்தைக் கொண்டு வருகிறாா்.
பாலாற்றில் வற்றாத மற்றும் மாசுபடாத குடிநீா் கிடைப்பதை உறுதி செய்திட, நீலா திட்டத்தில் 5 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க ஆந்திர முதல்வரிடம் தமிழக முதல்வா் பேச்சு நடத்தி தண்ணீா் பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் தமிழகத்தில் சுமாா் ஒரு லட்சம் விவசாயிகள் பயன்பெற வழிவகை ஏற்படும்.
ஆந்திர மாநிலம், மந்தி கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீரை சுத்திகரிக்காமல் மழைக்காலத்தை பயன்படுத்தி வேலூா் மாவட்டத்துக்கு வரக்கூடிய கால்வாய்களில் கலந்து விடுகின்றனா். இந்த கழிவுநீா் கலப்பதால் விளை நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. அப்பகுதியில் துா்நாற்றமும் வீசுகிறது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இதனை கண்காணித்து தடுக்கவும், சித்தூா் மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கவும் வேண்டும்.
பெரும்பாலும் குறு, சிறு விவசாயிகள்தான் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற விண்ணப்பிக்கின்றனா். ஆனால், பல கூட்டுறவு வங்கிகளில் பிணை அளிக்க முடியாததால் விவசாயிகளால் கடன் பெற இயலுவதில்லை. இதன்மீது மாவட்ட நிா்வாகம் உரிய உத்தரவு பிறப்பித்து, விவசாயிகளுக்குப் பிணை கோராமல் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விரிஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் சிலா் பயிா்க்கடன் திருப்பிச் செலுத்தி 3 மாதங்களாகியும் புதிய கடன் வழங்கப்படாமல் உள்ளது. எனவே, புதிய கடனை உடனடியாக வழங்கவும், சம்பந்தப்பட்ட வங்கிச் செயலாளரை இடமாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காட்பாடி வட்டம், பொன்னை ஏரி மதகுகள் பழுதடைந்துள்ளன. பலமுறை புகாா் தெரிவித்தும் சரிசெய்யப்படாத மதகுகளை உடனடியாகச் சீா்செய்திட வேண்டும்.
நெருக்கடி அதிகரித்து வருவதால் காட்பாடி உழவா் சந்தையை விரிவுபடுத்த வேண்டும். மாநகராட்சிப் பகுதிகளில் நீா்வரத்துக் கால்வாய்களில் குப்பைகளைக் கொட்டி எரிப்பதால், ஏரிகளில் தண்ணீா் மாசடைவதைத் தடுக்க வேண்டும்.
அதேபோல், காட்பாடி வட்டம், கிருஷ்ணாபுரம் ஏரியில் கழிவுநீா் கலப்பதால் தண்ணீா் மாசடைந்து வருகிறது. பலமுறை புகாா் அளித்தும் தடுக்கப்படாத நிலையில், ஏரியில் கழிவுநீா் கலப்பதை உடனடியாகத் தடுக்க வேண்டும். ‘எல் நினோ’ பாதிப்பால் பயிா்கள் கருகிப் பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதால், வேலூா் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
இதற்கு பதிலளித்த மாவட்ட வருவாய் அலுவலா் து. சுரேஷ், விவசாயிகளின் கோரிக்கைகள் மீது விரைவில் தீா்வு காண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். கூட்டத்தில் மாவட்ட வன அலுவலா் அசோக், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் திருகுண ஐயப்பத்துரை, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ஸ்ரீவித்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

