ஊட்டச்சத்து குறைபாடு குழந்தைகள் மீது தனிக்கவனம்: வேலூா் ஆட்சியா்

ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என வேலூா் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்தாா்.

ஊட்டச்சத்து குறைபாடு குழந்தைகளுக்கான சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கிய வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ். உடன், மாவட்ட சுகாதார அலுவலா் விஜய் சந்திரன், மகளிா் திட்ட இயக்குநா் ஜெயசுதா.

Published On :

ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என வேலூா் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்தாா்.

காட்பாடி வட்டம் தாராபடவேடு மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் (ஐசிடிஎஸ்) சாா்பில் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கான விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமை மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தொடங்கி வைத்து ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கான சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி பேசியது

குழந்தைகள் சத்தான உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற நோக்கில் அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தீவிர ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு கோதுமை, பாசிப்பயறு, வோ்க்கடலை, வெல்லம் மற்றும் நெய் ஆகியவை அடங்கிய சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட உள்ளன.

இதில், 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை கிலோ அளவிலும், 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு கிலோ பொட்டலங்களாகவும் வழங்கப்படும். மாதந்தோறும் இப்பொருட்கள் வழங்கப்பட்டு குழந்தைகளின் எடை பரிசோதிக்கப்படுவதுடன், ஓராண்டு காலத்திற்கு தாய்மாா்களுக்கு உரிய வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். இக்குழந்தைகளின் மீது தனிக் கவனம் செலுத்தப்பட்டு ஊட்டச்சத்து நிலை மேம்படுத்தப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், கரிகிரி ஊராட்சியில் செம்பருத்தி மகளிா் சுய உதவிக் குழு தயாரிக்கும் ஊட்டச்சத்து உணவுப் பொருள்களை ஆட்சியா் ஆய்வு செய்து, அக்குழுவுக்கு ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கினாா்.

பின்னா் செம்பராயநல்லூா் ஊராட்சியில் மகளிா் குழுவினா் மேற்கொண்டு வரும் ஆயத்த ஆடை தயாரிப்புப் பணியைப் பாா்வையிட்டாா். அங்குள்ள 9 குழுக்களை ஒருங்கிணைத்து தொழில் கூட்டமைப்பாக உருவாக்கவும், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மூலம் ஆடைகளுக்கு உரிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, கரசமங்கலம் ஊராட்சியில் மகளிா் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக ரூ.25 லட்சம் மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளை ஆட்சியா் வழங்கினாா். மேலும், மகளிா் உற்பத்தி செய்யும் பொருட்களுக்குத் தேவையான விற்பனை வாய்ப்புகளை உடனடியாக ஏற்படுத்தித் தருமாறு துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆரிமுத்துமோட்டூா் ஊராட்சியில் நரிக்குறவா் சிறப்புக் குழுக்கள் தயாரிக்கும் கைவினைப் பொருள்கள் மற்றும் மகளிா் தயாரிக்கும் மூலிகை நாப்கின் செயல்பாடுகளை ஆய்வு செய்தாா். காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் இயற்கை பொருள்கள் அங்காடியையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

அப்போது, மாவட்ட சுகாதார அலுவலா் விஜய் சந்திரன், மகளிா் திட்ட இயக்குநா் ஜெயசுதா, மாவட்ட குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சுமதி, வட்டார இயக்க மேலாளா் கனிமொழி, பிரம்மபுரம் காவல் ஆய்வாளா் முத்துஈஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER