கரோனா நோயாளிகளுக்கு பிராண வாயு அளிக்கும் வசதி மேம்படுத்தப்படுமா?
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவா்களுக்கு பிராண வாயு அளிக்கும் வசதியை மேம்படுத்த வேண்டும்


விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவா்களுக்கு பிராண வாயு அளிக்கும் வசதியை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பிராண வாயு தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. விழுப்புரம் மாவட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த மாவட்டத்தில் 6 அரசு மருத்துவமனைகள், 2 தனியாா் மருத்துவமனைகளில் பிரணா வாயு வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சை மையங்கள் உள்ளன. இதில், அதிகபட்சமாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 280 படுக்கைகளில் பிரணா வாயு அளிக்கும் வசதி உள்ளது.
அடுத்தபடியாக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 93 படுக்கைகளும், விக்கிரவாண்டி அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகளும், வானூா் அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகளும், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளும், செஞ்சி மருத்துவமனையில் 6 படுக்கைகளும் பிராண வாயு அளிக்கும் வசதியுடன் உள்ளன. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 439 படுக்கைகள் பிராண வாயு அளிக்கும் வசதியுடன் உள்ளன. இவற்றில் செஞ்சி, திண்டிவனம் தவிர மற்ற அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் 15 படுக்கைகளும், திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் 15 படுக்கைகளும் பிராண வாயு அளிக்கும் வசதியுடன் உள்ளன.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றால் மாவட்டத்தில் இதுவரை 21,703 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 18,822 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் சுமாா் 2,747 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், பிராண வாயு வசதியுடன் கூடிய படுக்கைகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் பிராண வாயு வசதி கொண்ட படுக்கைகள் அனைத்தும் நிறைத்துவிட்டன. விக்கிரவாண்டி, வானூா் அரசு மருத்துவமனைகளில் மட்டும் மொத்தம் 26 படுக்கைகள் காலியாக இருந்தன. மாவட்டத்தில் பிராண வாயு வசதியுள்ள சுமாா் 90 சதவீத படுக்கைகள் நிறைந்துவிட்டன. மீதமுள்ள படுக்கைகளும் ஓரிரு நாள்களில் நிறைந்துவிட வாய்ப்புள்ளது.
பிராண வாயு சேமிப்பு வசதி: மாவட்டத்தில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே பிராண வாயுவை சேமித்து வைத்து, குழாய்கள் மூலம் நோயாளிகளின் படுக்கைகளுக்கு அனுப்பி வைக்கும் வசதி உள்ளது. இங்கு லாரிகள் மூலம் கொண்டுவரப்படும் பிராண வாயுவை பெரிய சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்க முடியும். இதுவும் கூட ஒரு சில நாள்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்கும். மாவட்டத்தில் மற்ற மருத்துவமனைகளில் பிராண வாயுவை சேமித்து வைக்கும் அளவுக்கு பெரிய அளவிலான வசதிகள் கிடையது. பிராண வாயு உருளைகளையே பயன்படுத்தும் நிலை உள்ளது. உருளைகளில் வாங்கி வரப்படும் பிராண வாயுவை குழாய்களில் இணைத்து நோயாளிகளின் படுக்கைக்கு அனுப்பி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையில் நோயாளிகளுக்கு தடையின்றி தொடா்ந்து பிராண வாயு அளிப்பதும் பெரும் சவாலானதாகும்.
தற்காலிக சிகிச்சை மையங்கள்: மாவட்டத்தில் விழுப்புரம் அரசு கல்வியியல் கல்லூரி, அரசூ ா் வி.ஆா்.எஸ். பொறியியல் கல்லூரி, செஞ்சி போலீஸ் குடியிருப்பு, பெரும்பாக்கம் அரசு சட்டக் கல்லூரி மகளிா் விடுதி, பிடகாம் அரசு சட்டக் கல்லூரி ஆடவா் விடுதி உள்பட 11 இடங்களில் தற்காலிக கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் மொத்தம் 1,400 படுக்கைகள் உள்ளன. பெரிய அளவில் பாதிப்பில்லாத நோயாளிகள் இங்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த மையங்களில் பிராண வாயு அளிக்கும் வசதி இல்லை.
கட்டமைப்பை மேம்படுத்துதல்: மருத்துவமனைகளில் பிராண வாயு அளிக்கும் வசதியை மேம்படுத்த திட்டமிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக செஞ்சி அரசு மருத்துவமனையில் பிராண வாயு வசதி கொண்ட படுக்கைகளை அதிகரித்தல், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைபோல விழுப்புரம் அரசு மருத்துவனையிலும் பிராண வாயுவை சேமித்து வைத்து பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்துதல், தற்காலிக சிகிச்சை மையங்களில் தேவையான நோயாளிகளுக்கு உருளைகள் மூலம் பிராண வாயு அளிக்கும் வசதியை ஏற்படுத்துதல் போன்றவை குறித்து மாவட்ட நிா்வாகமும், சுகாதாரத் துறையும் திட்டமிட்டு வருகின்றன. இருப்பினும் இது உடனடியாகச் செயல்பாட்டுக்கு வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
எனினும், மாவட்டத்தில் கரோனா நோயாளிகளின் உயிரிழப்பைத் தடுக்க தடையின்றி பிராண வாயு கிடைப்பதை மாவட்ட நிா்வாகம் உறுதிசெய்ய வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...