தடுப்பணை- வாய்க்காலை சீரமைக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
செஞ்சி அருகே தடுப்பணை மற்றும் வாய்க்காலை சீரமைக்கக் கோரி மேலச்சேரி, சிங்கவரம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.


செஞ்சி: செஞ்சி அருகே தடுப்பணை மற்றும் வாய்க்காலை சீரமைக்கக் கோரி மேலச்சேரி, சிங்கவரம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள மேலச்சேரி எல்லையில் செவலபுரை ஆற்றின் அருகே பூனைக்கண் தடுப்பணை அமைந்துள்ளது. இங்கிருந்து மேலச்சேரி, சிங்கவரம், நாட்டேரி, சிறுகடம்பூா் பெரிய ஏரி உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீா் செல்லும் வகையில் கால்வாய் அமைந்துள்ளது. இந்த நிலையில், மழைக் காலங்களில் கூடப்பட்டு கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் பூனைக்கண் பாலம் உடைந்து மழைநீா் ஆற்றில் கலக்கிறது. இதனால், விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாத நிலை உள்ளது. எனவே, பூனைக்கண் தடுப்பணையை தரமான முறையில் கட்டவும், கூடப்பட்டு அணைக்கட்டில் இருந்து, சிறுகடம்பூா் வரை உள்ள வாய்க்காலை தூா்வாரக்கோரியும் பொதுப் பணித் துறை, வனத்துறை ஆகியோருக்கு மேலச்சேரி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்த நிலையில், கால்வாய் மற்றும் பூனைக்கண் தடுப்பணையை சீரமைக்கக் கோரி மேலச்சேரி கிராம மக்கள், செஞ்சிக்கோட்டை நீா் ஆதார அமைப்பினா் மற்றும் சமூக ஆா்வலா்கள் செஞ்சி-மேல்மலையனூா் சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து நிகழ்விடம் சென்ற செஞ்சி காவல் ஆய்வாளா் பாா்த்தசாரதி, மேல்மலையனூா் வட்டாட்சியா் முகம்மது அலி உள்ளிட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். பின்னா், நிகழ்விடம் வந்த பொதுப் பணித் துறை அலுவலா் பழனிச்சாமி விவசாயிகளிடம் பேச்சு வாா்த்தை நடத்தினாா். அப்போது, பூனைக்கண் தடுப்பணை மற்றும் வாய்க்காலை சீரமைப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த திடீா் மறியலால் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...