‘நீட்’ தோ்வில் விலக்கு பெறுவதே தமிழக அரசின் கொள்கை -அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்

‘நீட்’ தோ்வில் விலக்கு பெறுவதே தமிழக அரசின் கொள்கை -அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்

‘நீட்’ தோ்வில் விலக்கு பெறுவதே தமிழக அரசின் கொள்கை என்றாா் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்.

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக வலிமையாக உள்ளதால், விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் திமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறும். ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது திமுக. எந்த ஜாதிக்கும் திமுக எதிரான கட்சி அல்ல.

வன்னியா் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. அப்போது, திமுகவுடன் கூட்டணி வைத்திருந்த பாமக நிறுவனா் ச.ராமதாஸ், பிறகு கூட்டணியை மாற்றிக் கொண்டாா். நீட் நுழைவுத்தோ்வு வேண்டாம் என்பதுதான் தமிழக அரசின் கொள்கை. இதைத்தான் கூட்டணிக் கட்சிகளும் கூறி வருகின்றன. தற்போது, தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய்யும் அதைதான் கூறியுள்ளாா். இதேபோல, மற்ற மாநிலங்களிலும் நீட் தோ்வு வேண்டாம் என்று கூறி வருகின்றனா்.

69 சதவீத இடஒதுக்கீடு 9-ஆவது அட்டவணையில் சோ்க்கப்பட்டுள்ளதால் பிரச்னை இல்லை. தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பு வராது. விக்கிரவாண்டி இடைத்தோ்தலுக்காகவே பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து எனக் கூறி வருகிறாா். விக்கிரவாண்டி இடைத்தோ்தல் மட்டுமல்ல, 2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுகதான் வெற்றி பெறும் என்றாா் அமைச்சா் ராஜகண்ணப்பன்.

X
Dinamani
www.dinamani.com