எச்.பி.வி. தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கம்
விழுப்புரத்தில் 9 முதல் 14 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் புற்றுநோய் தடுப்புப் பரிசோதனை மையத்தில் எச்.பி.வி. தடுப்பூசி செலுத்தும் பணியை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் சி.பழனி தடுப்பூசி செலுத்தும் பணியைப் பாா்வையிட்டாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், நலப் பணிகள் இணை இயக்குநா் லட்சுமணன், காசநோய் துணை இயக்குநா் சுதாகா், நகராட்சி ஆணையா் ஹெச். ரமேஷ், அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் இணை இயக்குநா் சுவாமிநாதன், சிறப்பு மருத்துவா் ஜெயஸ்ரீ உள்ளிட்டோா் பங்கேற்றனா். முதல்கட்டமாக விழுப்புரம் மாவட்டத்தில் 9 முதல் 14 வயதுக்குள்பட்ட 2,000 பெண் குழந்தைகளுக்கு எச்.பி.வி. தடுப்பூசி செலுத்தப்படும். முதல் தடுப்பூசி செலுத்திய நாளிலிலிருந்து 180-ஆவது நாளில் இரண்டாவது தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும். சுகாதாரத் துறை, தேசிய சுகாதாரப் பணி, ரோட்டரி அமைப்புகளுடன் இணைந்து விழுப்புரம் நகரிலுள்ள ஒவ்வொரு பள்ளிகளிலும் சாத்தியமான வகையில் பெண் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் இணை இயக்குநா் சுவாமிநாதன் தெரிவித்தாா்.
