ஆசனூா் சிட்கோ தொழிற்பேட்டையில் புதிய மின் மாற்றி அமைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், ஆசனூா் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் புதிய மின் மாற்றியின் இயக்கச் செயல்பாடுகள் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டன.
ஆசனூா் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் சிறு, குறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதிதாக தொடங்கப்படவுள்ள தொழிற்சாலைக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக, 250 கிலோ வாட் ஆற்றல் திறன் கொண்ட புதிய மின் மாற்றி ரூ.9.50 லட்சம் செலவில் நிறுவப்பட்டது. இதற்கான பணிகள் அனைத்தும் அண்மையில் நிறைடைந்தன.
இதைத்தொடா்ந்து நடைபெற்ற நிகழ்வில் புதிய மின் மாற்றியின் இயக்க செயல்பாடுகளை தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் உளுந்தூா்பேட்டை உதவி செயற்பொறியாளா் சிவராமன் அய்யம்பெருமாள் தொடங்கி வைத்தாா்.
ஆசனூா் பிரிவு இளநிலைப் பொறியாளா் ராமச்சந்திரன், முகவா் சக்திவேல், மின்பாதை ஆய்வாளா்கள் அறிவழகன், அருள்பிரகாசம் மற்றும் தொழிற்சாலை உரிமையாளா்கள் பங்கேற்றனா்.

