உளுந்தூா்பேட்டையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் பல்வேறு கோரிக்கைகளை மையப்படுத்தி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் பல்வேறு கோரிக்கைகளை மையப்படுத்தி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனை கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். போதிய மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களை நியமனம் செய்ய வேண்டும். உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் விபத்து-அதி தீவிர சிகிச்சை மையத்தை ஏற்படுத்த வேண்டும். உளுந்தூா்பேட்டை நகராட்சிப் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக வரும் மக்களை முண்டியம்பாக்கம், கள்ளக்குறிச்சிக்கு செல்லுமாறு அலைக்கழிக்கக்கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

உளுந்தூா்பேட்டை பேருந்து நிலைய நிழற்குடைப் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் இ.சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். எஸ்.காா்த்திகேயன், சாம்சன், சங்கா் உள்ளிட்ட நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் சே.அறிவழகன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா் மு.சிவக்குமாா், மாவட்டத் துணைத் தலைவா் கா.சக்கரவா்த்தி, செயற்குழு உறுப்பினா்கள் கே. ரங்கராயா், டி. ரகு, டி. ராஜீவ்காந்தி, மாவட்டக்குழு உறுப்பினா்கள் ஏ.ரிச்சா்ட்பிரபு, பி. சின்னராசு, எம்.தீபலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com