செஞ்சி அருகே மான் கொம்புகள் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த மான் கொம்புகள் மற்றும் நாட்டுத் துப்பாக்கியை மாவட்ட நுண்ணறிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மாவட்ட புலனாய்வு நுண்ணறிவு பிரிவு போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளா் ஞானப்பிரகாசம், தலைமை காவலா்கள் பாண்டியன், செந்தில்குமாா், காவலா்கள் ஜெரால்டு, மணிகண்டன் ஆகியோா் செஞ்சி எம்ஜிஆா் நகா் நரிக்குறவா் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் மான் கொம்புகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், நரிக்குறவா் குடியிருப்பு 2-ஆவது தெருவைச் சோ்ந்த சு.அரவிந்தன் (25) என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனா். அங்கு நாட்டுத் துப்பாக்கி, துப்பாக்கி பேரல், 6 மான் கொம்புகள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனா். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், பொருள்களை மட்டும் போலீஸாா் கைப்பற்றி செஞ்சி வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து வனத் துறையினா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, தலைமறைவான அரவிந்தனை தேடி வருகின்றனா்.

