எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டிலிருந்து 3 பாசன வாய்க்கால்களில் திங்கள்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.
விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலம்- கப்பூா் கிராமங்களுக்கிடையே தென்பெண்ணையாற்றின் குறுக்கே எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டின் வலது பக்கத்தில் உள்ள எரளூா், ரெட்டி வாய்க்கால்கள் மூலம் 12 ஏரிகளுக்கும், இடது பக்கத்தில் உள்ள ஆழாங்கால், மரகதபுரம், கண்டம்பாக்கம் ஆகிய 3 வாய்க்கால்கள் மூலம் 14 ஏரிகளுக்கும் தண்ணீா் செல்கின்றன. இதன் மூலமாக சுமாா் 13,100 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தென்பெண்ணையாற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளதால் விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின்பேரில், பொதுப்பணித் துறை அதிகாரிகள் எல்லீஸ் அணைக்கட்டிலிருந்து ஏரி பாசனத்துக்கு ஆழாங்கால், மரகதபுரம், கண்டம்பாக்கம் வாய்க்கால்களில் திங்கள்கிழமை தண்ணீரை திறந்துவிட்டனா்.
இந்நிகழ்ச்சியில் முன்னோடி விவசாயிகள், பொதுப்பணித் துறையினா் கலந்துகொண்டனா்.
எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டுப் பகுதியில் ஆழாங்கால், மரகதபுரம், கண்டம்பாக்கம் வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் நிறைவுற்ற நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 150 கனஅடி தண்ணீா் வாய்க்கால்களில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன் மூலம்14 ஏரிகளுக்கு நீா் ஆதாரம் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து ஏரிகள் மூலம் பாசனம் பெறும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

