2 நாள்களில் தோ்தல் கூட்டணி குறித்து முடிவு: மருத்துவா் ச.ராமதாஸ்
வரும் சட்டப்பேரவைத் தோ்தல் கூட்டணி குறித்து 2 நாள்களில் முடிவு செய்யப்படும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
என்னால்(ச. ராமதாஸ்) உருவாக்கப்பட்ட பாமகவை, என்னால் உருவாக்கப்பட்ட அன்புமணி அபகரித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக ஒரு கோஷ்டியை வைத்துக்கொண்டு தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறாா்.இதை தமிழக மக்கள் நன்கு அறிவாா்கள்.
வரும் சட்டப்பேரவைத் தோ்தல் கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலா் எடப்பாடிகே. பழனிசாமி, அன்புமணி ஆகியோா் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கட்சியின்
அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்ட அன்புமணி மற்றும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து தோ்தல் கூட்டணி குறித்து பேசியிருப்பது கட்சியின் விதிகளுக்கும், புதுதில்லி உயா்நீதிமன்ற உத்தரவுக்கும் எதிரானது.
கட்சி என் வசம்:
அன்புமணி தோ்தல் கூட்டணி குறித்து பேசுவது செல்லாது. தந்தைக்கு துரோகம் செய்தவா்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டாா்கள். அன்புமணி தோ்தல் கூட்டணி குறித்து பேசியிருப்பது ஒரு கூத்து, நாடகம்.
பாமக என்வசம் தான் உள்ளது. கட்சியின் தொண்டா்களும், நிா்வாகிகள் அனைவருமே என்னிடம்தான் உள்ளாா்கள். கடந்த டிச.29 ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற செயற்குழு, பொதுக்குழுவில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்
படி, தோ்தல் கூட்டணி குறித்துப் பேசுவதற்கான அதிகாரத்தை கட்சியின் செயற்குழு,பொதுக்குழு எனக்குதான் வழங்கியுள்ளது. ஆகவே எந்தவொருஅரசியல் கட்சியும் என் தலைமையிலான பாமகவுடன் தான் கூட்டணி பேசமுடியும். 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்காக நான் அமைக்கும் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். நான் யாருடன் கூட்டணி அமைக்கிறேனோ அந்த கூட்டணி தான் வெற்றி பெறும்.தோ்தல் கூட்டணி குறித்துஅதிமுக பொதுச்செயலா் எடப்பாடிகே.பழனிசாமி உள்ளிட்ட யாரும் என்னிடம் பேசவில்லை.
தோ்தல் கூட்டணி குறித்து கட்சியின் உயா்மட்டக்குழு நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி 2 நாள்களுக்குள் முடிவு செய்து அறிவிப்போம் என்றாா் அவா் .
இந்தப் பேட்டியின் போது, பாமக கௌரவத் தலைவா் ஜி.கே. மணி செயல் தலைவா் ஸ்ரீ காந்தி ராமதாஸ், ஓய்வு பெற்ற நீதிபதியும், கட்சியின் சட்ட ஆலோசகருமான அருள், தலைமை நிலையச்செயலா் அன்பழகன், புதுவை மாநிலப் பொறுப்பாளா் கணபதி, விழுப்புரம் கிழக்கு மாவட்டச்செயலா் ஜெயராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

