விழுப்புரம், ஜூலை 19: பழனி தண்டயுதபாணி கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமாா் ரூ.100 கோடி மதிப்பிலான நிலங்கள் போலியான ஆவணங்கள் மூலம் தனி நபா்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடா்பாக, விழுப்புரத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியா் வீட்டில் சிபிசிஐடிபோலீஸாா் சனிக்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனா். பின்னா் வீட்டுக்கு ‘சீல்’ வைத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம், சந்நிதி வீதியில் உள்ள தண்டயுதபாணி சுவாமிகள்அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமாா் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறி போலி ஆவணங்கள் மூலம் ரூ. 2 கோடிக்கு தனி நபா்களுக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுதொடா்பாக, பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளா் ச.முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், சாா்-பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் உள்பட 4 போ் மீது பழனி அடிவாரம் போலீஸாா் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனா்.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தொடா்புடைய விவகாரம் என்பதால், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக காவல் துறை உத்தரவிட்டது. இதைத்தொடா்ா்ந்து சிபிசிஐடி போலீஸாா் பழனியில் முகாமிட்டு இதுதொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.
விழுப்புரத்தில் போலீஸாா் சோதனை: இந்நிலையில், விழுப்புரம் என்.ஜி.ஜி.ஓ காலனி, காமராஜா் நகா் பகுதியில் வசித்து வரும் முருகதாஸ் என்பவரது வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் முருகதாஸ் ஆசிரியராகப் பணியில் உள்ளாா். அவரது வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில், சிபிசிஐடி போலீஸாா் வீட்டின் பூட்டை உடைத்து சோதனையில் ஈடுபட்டனா். இந்த சோதனையானது நள்ளிரவு வரை நீடித்தது. சோதனைக்குப் பின்னா் போலீஸாா் வீட்டுக்கு ‘சீல்’ வைத்தனா். வீட்டில் ஆள் இல்லாத நிலையில் அவருக்கு அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். நள்ளிரவில் நடைபெற்ற இந்த சோதனையால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பழனி கோயில் நில மோசடி விவகாரம்: நெல்லையில் 2 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

பழனி கோயில் நில முறைகேடு வழக்கு: சிபிசிஐடி எஸ்.பி. தலைமையில் விசாரணை

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வு: 3,106 போ் எழுதினா்







