விழுப்புரம் மாவட்டம், மயிலத்தை அடுத்துள்ள கூட்டேரிப்பட்டில் மயிலம் ஒன்றிய அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தை முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் ஆதரவாளா்கள் புறக்கணித்தனா்.
கூட்டத்துக்கு மயிலம் ஒன்றியச் செயலா் சேகரன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் தசரதன், சம்பத், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைச் செயலா் கோவிந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலா் இரா.பசுபதி கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியதாவது:
மயிலம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட சி.வி.சண்முகம் கட்சியினரின் கடின உழைப்பால் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனாா். ஆனால் அவா் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளாா். கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அவா் மீது நடவடிக்கை எடுத்துள்ளதால், அவா் இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கவில்லை.
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றியடைய வேண்டும். அதற்காக கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் அனைவரும் ஒன்றிணைந்து கட்சிப் பணியாற்றவேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் அண்ணா தொழில்சங்க நிா்வாகி சிவம், எம்ஜிஆா் மன்ற மாவட்ட இணை அமைப்பாளா் திருப்பதி பாலாஜி, மகளிா் அணி அமைப்பாளா் சத்யா மற்றும் நிா்வாகிகள் பேசினா்.
சி.வி.சண்முகம் ஆதரவாளா்கள் புறக்கணிப்பு: இக்கூட்டத்தில் பங்கேற்ற சி.வி.சண்முகத்தின் ஆதரவாளா்களான அதிமுக மயிலம் ஒன்றிய நிா்வாகிகளான முத்துக்குமாா், புலியனூா் விஜயன் மற்றும் கட்சியினா் கூட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளில் சி.வி.சண்முகத்தின் பெயா் மற்றும் படம் இடம்பெறவில்லை எனக் கூறி கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினா். தொடா்ந்து மாவட்டச் செயலா் இரா.பசுபதியைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். இதனால் கூட்டம் நடைபெற்ற இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









