அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குடிநீர் பிரச்சனையை தீர்க்க நகரமன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்!

சிதம்பரம் நகரமன்றக்கூட்டம் அதன் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் (அதிமுக) தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக முதல்வர் ஆணையின்படி அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் மூலம் சிதம்பரம்

News image
Updated On :29 ஏப்ரல் 2013, 9:00 am

G.Sundararaj

சிதம்பரம் நகரின் மேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நகரமன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

சிதம்பரம் நகரமன்றக்கூட்டம் அதன் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் (அதிமுக) தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக முதல்வர் ஆணையின்படி அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் மூலம் சிதம்பரம் நகராட்சிக்கு ரூ.250 லட்சம் செலவில் புதிய அலுவலக கட்டடங்கள் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் பேசிய விபரம் வருமாறு:

த.ஜேம்ஸ்விஜயராகவன் (திமுக)- கோடைக்காலம் நெருங்கிவிட்டதால் நகரில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலவீதி நீர்தேக்கத் தொட்டியில் புதிதாக வால்வு வாங்கப்பட்டு பொருத்தப்படாமல் உள்ளது. இதனால் வால்வு சரியில்லாததால் நீர் வீனாகி தொட்டியில் நீரேற்ற முடியாமல் போகிறது. எனவே உடனடியாக வால்வு பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்படுகிறது. கோடைக்காலத்தில் நோய் ஏற்பட்டு நாய்கள் வெறிபிடித்து பொதுமக்களை கடித்து விடுகிறது. தாம்பரம் நகராட்சியில் ரூ.12 லட்சம் செலவில் இடம் அமைத்து நாய்களை பிடித்து பராமரிக்க புளுகிராஸ் அமைப்பினரிடம் ஒப்படைத்துள்ளனர். அதுபோன்று சிதம்பரம் நகராட்சியிலும் மேற்கொள்ள வேண்டும்.

தலைவர்: இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எல்.சீனுவாசன் (மதிமுக)- சிதம்பரம் நகரின் மேற்குபகுதியில் சாக்கடைநீர் கலந்த குடிநீர் வழங்கப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீர் கண்காணிப்பாளர் ஷேக்முகைதீன்: ஒரு சில இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. சில தினங்களில் சரி செய்யப்படும்.

அப்புசந்திரசேகரன் (திமுக)- கோடைக்கால தேவையை முன்னிட்டு குடிநீர் பிரச்சனையை தீர்க்க நகராடசி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வார்டுகளில் கைப்பம்பு போட வேண்டும். குப்பைகளை அள்ளிச்செல்லும் லாரி மற்றும் டிராக்டர்களிலிருந்து குப்பைகள் காற்றில் பறந்து கீழே விழுந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. நகரில் தனியார் சார்பில் 600 அடிக்கு மேல் போர்வெல் போடப்படுகிறது. அதற்கு நகராட்சி அனுமதி பெற்றுள்ளார்களா?

ஆணையர் (பொறுப்பு)- நகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும் என விதிகள் இல்லை.

ஆ.ரமேஷ் (தமிழக வாழ்வுரிமை கட்சி)- மற்ற நகரங்களை விட சிதம்பரம் நகரில் ஒரளிவிற்கு குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் மேற்கு பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோ.நடராஜன் (திமுக)- நகரில் சாக்கடைகள் தூர்வாரப்படாததால் நீர் தேங்கி கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகியுள்ளது. எனவே சாக்கடைகளை தூர்வார வேண்டும். நகரில் குடிநீர் பற்றாக்குறையை போக்க அனைத்து வார்டுகளில் அடிபம்பு அமைக்க வேண்டும்.

பெரு.திருவரசு (விடுதலைச் சிறுத்தைகள்)- நகராட்சிக்கு சொந்தமான இரு குளங்கள் 1வது வார்டில் உள்ளது. இந்த குளங்கள் தூர்ந்து போய் உள்ளதால், தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகமதுஜியாவுதீன் (காங்கிரஸ்)- பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே தற்போது ஒரு சுகாதார ஆய்வாளர்தான் உள்ளார். மேலும் கூடுதலாக ஆய்வாளர்கள் நியமிக்க வேண்டும்.

ரா.செந்தில்குமார் (துணைத் தலைவர்)- சிதம்பரம் நகராட்சியில் 11 பணியிடங்களை நிரப்ப தமிழக முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். தற்போது மேலும் 3 சுகாதார பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர்.

ருக்குமணி (திமுக)- எனது வார்டில் உள்ள தெற்குவாணியத்தெருவில் சர்வே எண் 805 என்ற பொது இடத்தில் சிலர் ஆக்கிரமித்து அதில் கட்டடம் கட்ட நகராட்சிக்கு அனுமதி கோரியுள்ளனர். அதற்கு அனுமதி வழங்கக்கூடாது.

கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ், மின் கண்காணிப்பாளர் ஷேக்முகைதீன், மீட்டிங் கிளார்க் காதர்கான் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.