குமராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பெராம்பட்டு - திட்டுக்காட்டூர் பகுதிகளை இணைக்கும் வகையில் ரூ.19.50 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
நிகழ்ச்சிக்கு குமராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். குமராட்சி ஒன்றிய அவைத் தலைவர் சுந்திரமூர்த்தி, பரங்கிப்பேட்டை ஒன்றிய அவைத் தலைவர் கோவி.ராசாங்கம், பெராம்பட்டு ஊராட்சி செயலர் சுந்தரம், குமராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமராட்சி ஒன்றிய பொறியாளர் விஜயரகுநாத் வரவேற்றார். சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திட்டுக்காட்டூர், கீழகுண்டலபாடி, அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் உள்ளிட்ட கிராமங்கள் கொள்ளிடம், பழைய கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே தீவுபோல அமைந்துள்ளன.
ஆறுகளில் வெள்ளப் பெருக்கின்போது பழைய தரைப்பாலம் மூழ்கிவிடுவதால் இந்த கிராமங்கள் மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்படுகின்றன. எனவே, மழை, புயல் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கவும், பிற பகுதிகளுக்குச் செல்ல ஏதுவாகவும் உயர் மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதை ஏற்று நானும், எம்பி ஆ.அருண்மொழிதேவனும் தமிழக முதல்வர், கனிம வளத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தோம்.
இதை ஏற்ற அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழ்நாடு அரசின் புவியியல்,கனிம அறக்கட்டளை நிதியிலிருந்து ரூ.19.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பெராம்பட்டு - திட்டுக்காட்டூர் கிராமங்களை இணைக்கும் வகையில் சுமார் 500மீ நீளத்துக்கு உயர்மட்ட பாலம் அமைக்க அரசாணை பிறப்பித்தார் என எம்எல்ஏ தெரிவித்தார்.
விழாவில் நிர்வாகிகள் திருஞானம், குணசேகர், முத்து, கணேஷ், சேகர், கணேசன், செல்வநாதன், சுப்பிரமணியன், தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒப்பந்த நிறுவன மேலாளர் சண்முகம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








