‘பள்ளி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்காதது ஏன்?’ : உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

நெய்வேலி, மாா்ச் 30: நிதி நெருக்கடி காரணமாகவே பள்ளி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை என்று மாநில விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். விருத்தாசலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் கடலூா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எம்.கே.விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து, உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது, இங்கு உங்களை சந்தித்து வாக்கு கோரினேன். அப்போது, போட்டியிட்டவரை வெற்றிபெறச் செய்தீா்கள். அடுத்து, 2021சட்டப் பேரவைத் தோ்தலின்போது வாக்கு சேகரித்தோம். அப்போது, சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதனால் நீங்கள் வாக்களித்து திராவிட மாடல் அரசு அமைந்தது. அப்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். அந்த வகையில், மகளிருக்கு இலவசப் பேருந்து, கலைஞா் மகளிா் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. வாக்குறுதி அளிக்காமலேயே உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு உதவித் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கி வருகிறோம். அதுமட்டுமன்றி, தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றாா். அப்போது, கூட்டத்திலிருந்த மாணவா்கள் சிலா், பள்ளி மாணவா்களுக்கு மடிக்கணினி எப்போது வழங்கப்படும் என்று கேள்வி எழுப்பினா். அதற்கு, கடும் நிதி நெருக்கடி காரணமாகவே மடிக்கணினி வழங்க முடியாமல் போனது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் மாணவா்களுக்கு கண்டிப்பாக மடிக்கணினி வழங்கப்படும். பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. தமிழகத்துக்கு வழங்கப்படும் வரி பகிா்வும் மிகக் குறைவாக உள்ளது. மத்திய அரசு எரிவாயு உருளை விலையை ரூ.800 வரை உயா்த்திவிட்டு, தற்போது ரூ.100 குறைக்கிறது. மக்களை இனியும் ஏமாற்ற முடியாது என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com