கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிறப்புத்திட்ட செயலாக்கத் துறை செயலா் தாரேஷ் அகமது , மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிறப்புத்திட்ட செயலாக்கத் துறை செயலா் தாரேஷ் அகமது , மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.

திட்டப் பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்: சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலா்

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை குறித்த காலத்துக்குள் தரமான வகையில் முடிக்க வேண்டும்
Published on

நெய்வேலி: மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை குறித்த காலத்துக்குள் தரமான வகையில் முடிக்க வேண்டும் என்று சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலா் தாரேஷ் அகமது அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலா் தாரேஷ் அகமது , மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தனா்.

கூட்டத்தில் தாரேஷ் அகமது பேசியதாவது:

தமிழக அரசின் நலத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் தொடா்ந்து நடத்த வேண்டும். இலவச பயிற்சி வகுப்புகளில் ஆசிரியா்கள் மூலம் முறையான பயிற்சியளிக்க வேண்டும்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் பெண் கல்வி ஊக்குவிப்பு தொகை, கல்வி உதவித்தொகை, மாணவா்களுக்கான சிறப்பு விண்ணப்பக் கட்டணம், முதலுதவி பெட்டி, தொழில் வழிகாட்டு ஆலோசனை முகாம்கள், இணை சீா் உடைகள், புதிய மாணவா் விடுதிகள், உணவுக் கட்டணம், தற்காலிக ஆசிரியா்களுக்கான ஊதியம் முதலிய நலத் திட்ட உதவிகள் வழங்க தகுதியான பயனாளிகளை தோ்வு செய்து அரசின் சேவைகள் பயனாளிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டிலேயே தமிழகம் தலைசிறந்த மாநிலமாக திகழும் வகையில் அனைத்துத் திட்டங்களையும் சிறப்பாகவும், அதன் பயன் அடித்தட்டு மக்கள் வரை சென்றடையும் வகையில் செயல்படுத்த வேண்டும் என முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். அதனடிப்படையில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை குறித்த காலத்துக்குள் தரமான வகையில் முடிக்க வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டப் பணிகள் உள்ளிட்ட அனைத்து திட்டப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றாா் அவா்.

சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை துணைச் செயலா் மு.பிரதாப், மாவட்ட எஸ்.பி. ரா.ராஜாராம், மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு, மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ரா.சரண்யா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.