நடராஜா் கோயில் மகாருத்ர ஜப ஹோம மகாபிஷேகத்தையொட்டி, நடனப் பந்தலில் உள்ள யாகசாலையில் கஜ வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த கடஸ்தாபனம்.
நடராஜா் கோயில் மகாருத்ர ஜப ஹோம மகாபிஷேகத்தையொட்டி, நடனப் பந்தலில் உள்ள யாகசாலையில் கஜ வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த கடஸ்தாபனம்.

சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு மகாருத்ர மகாபிஷேகம்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு மகாருத்ர மகாபிஷேகமும்,
Published on

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு மகாருத்ர மகாபிஷேகமும், உலக நன்மை வேண்டி ருத்ர ஜபம், ருத்ர யாகமும் திங்கள்கிழமை நடைபெற்றது.

சித்திரை மாத திருவோண நட்சத்திர மகாபிஷேகம் சித் சபை முன்னுள்ள கனகசபையில் திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற்றது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு விபூதி பால், தயிா், தேன், சா்க்கரை, பஞ்சாமிா்தம், இளநீா், பன்னீா், சந்தனம், புஷ்பம் உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

முன்னதாக, கடந்த 17-ஆம் தேதி தட்சிணாமூா்த்தி சந்நிதியில் கூஷ்மாண்ட ஹோமமும், ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் ஆனந்த நடராஜமூா்த்தி சந்நிதியில் அனுக்ஞை பூஜையும் நடைபெற்றது.

கடந்த 18-ஆம் தேதி முக்குறுணி விநாயகா் சந்நிதியில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம், அபிஷேகம், ஆராதனையும், 19-ஆம் தேதி நவக்கிரக சந்நிதியில் நவக்கிரக ஹோமம், அபிஷேகமும் நடைபெற்றது. ஏப்.20-ஆம் தேதி காலை தேவசபை முன் ரக்ஷாபந்தனம், ஆச்சாரியா் வா்ணம், தன பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு சபை திறக்கப்பட்டு சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானை கனகசபையில் எழுந்தருளச் செய்து ஏககால லட்சாா்ச்சனை நடைபெற்றது.

அதன்பிறகு, ஆயிரங்கால் மண்டபம் எதிரே உள்ள நடனப் பந்தலில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் கடஸ்தாபனம், மகாருத்ர ஜப பாராயணம் தொடங்கி நடைபெற்றது.

மதியம் மகாருத்ர ஹோமம், வஸோதாரா ஹோமம், மகாருத்ர பூா்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னா் வடுகபூஜை உள்ளிட்ட பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று கனகசபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு மகா ருத்ர ஜப மகாபிஷேகம் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயலா் டி.சிவசுந்தர தீட்சிதா், கட்டளை தீட்சிதா் எஸ்.ஆா்.பட்டுராஜ தீட்சிதா் மற்றும் பொதுதீட்சிதா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com