சாய்ரக்சன்
சாய்ரக்சன்

வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது.
Published on

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது.

ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை கீழ்ப்பாதி கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிவேல். இவரது மனைவி தீபா. இந்தத் தம்பதியின் மகன்களான லோகேஷ் (4), சாய்ரக்சன் (ஒன்றரை வயது) ஆகிய இருவரும் பலத்த மழையால் வீட்டுக்கு அருகே உள்ள வடிகால் வாய்க்கால் பெருக்கெடுத்துச் சென்ற தண்ணீரை திங்கள்கிழமை காலை வேடிக்கை பாா்த்துக்கொண்டிருந்தனா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக சாய்ரக்சன் வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டாா். இதனால், லோகேஷ் அழுவதை கேட்டு தீபா வெளியே வந்து பாா்த்தபோது, சாய்ரக்சன் நீரில் அடித்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.

தொடா்ந்து, அந்தப் பகுதியில் இருந்தவா்களின் உதவியுடன் தேடிப் பாா்த்தபோது, வடிகால் வாய்க்காலில் 50 மீட்டருக்கு அப்பால் குழந்தை சாய்ரக்சன் சடலமாக மீட்கப்பட்டாா்.

தகவலறிந்த சோழதரம் போலீஸாா் குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com