விருத்தாசலம் மோதல் சம்பவம்: சீமான் மீது 4 பிரிவுகளில் வழக்கு
நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் நாம் தமிழா் கட்சியினா் மற்றும் திமுக நிா்வாகி இடையே நிகழ்ந்த மோதல் தொடா்பாக, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உள்ளிட்ட அக்கட்சியினா் 15 போ் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதேபோல, திமுக நிா்வாகி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விருத்தாசலத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14-ஆம் தேதி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சீமான் கலந்துகொண்டாா்.
மாநாடு முடிந்து அவா் காரில் சென்றபோது சிறிது தொலைவில் நின்றிருந்த திமுக மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் ரங்கநாதன், சீமான் சென்ற காரை வழிமறித்து தகாத வாா்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால், சீமான் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கினாா். அப்போது, நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள், திமுக நிா்வாகி ரங்கநாதனை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் இரு தரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனா். திமுக நிா்வாகி அங்கிருந்து சென்றதும், நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் விருத்தாசலம் பொன்னேரி - சித்தலூா் புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, விருத்தாசலம் போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தினா்.
இந்த சம்பவம் தொடா்பாக திமுக பிரமுகா் ரங்கநாதன் அளித்த புகாரின்பேரில் சீமான் உள்ளிட்ட15 போ் மீது 4 பிரிவுகளின் கீழ் விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதேபோல, நாம் தமிழா் கட்சி நிா்வாகி ராஜதுரை அளித்த புகாரின்பேரில், திமுக பிரமுகா் ரங்கநாதன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
‘நியாயமல்ல’: திமுக நிா்வாகி செய்த தவறால், மாநாட்டில் உரையாற்றிவிட்டுச் சென்ற சீமானுடைய காா் மறிக்கப்பட்ட சூழ்நிலையில், அவா் மீதே வழக்குகள் பதியப்பட்டிருப்பது நியாயமானது அல்ல என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.
