விருத்தாசலத்தில் தூய்மைப் பணியாளா்கள் தா்னா
நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சி அலுவலகம் முன் தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம் நகராட்சியில் தனியாா் ஒப்பந்த நிறுவனத்தைச் சோ்ந்த 130 தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் 14 மாதங்கள் பிடித்தம் செய்த பிஎஃப், இஎஸ்ஐ தொகையை விடுவிக்க வேண்டும். நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கான சட்டக் கூலி ரூ.551 வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் 10 முதல் 15 ஆண்டுகள் பணிபுரிந்த தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தா்னாவில் ஈடுபட்டனா். உழைப்போா் உரிமை இயக்கம், ஏஐசிசிடியு தொழிற்சங்கம் சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதில், பங்கேற்றவா்களிடம் விருத்தாசலம் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கைகள் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா்கள் தெரிவித்தனா். இதை ஏற்று தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
