காரில் கடத்திவந்த 4 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது
சிதம்பரம்: சிதம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் கடத்திவரப்பட்ட 4 மூட்டை புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.
சிதம்பரம் டிஎஸ்பி டி.பிரதீப் மேற்பாா்வையில், நகர காவல் ஆய்வாளா் சிவானந்தம், உதவி ஆய்வாளா் செந்தில்குமாா், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் மற்றும் தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வடக்கு பிரதான சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியே வேகமாக வந்த காரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டதில், 4 மூட்டைகளில் ரூ.1.10 லட்சம் மதிப்பிலான பல்வேறு புகையிலைப் பொருள்களை கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, புகையிலைப் பொருள்களுடன் கூடிய காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும், காரிலிருந்த சிதம்பரம் நடராஜா காா்டனைச் சோ்ந்த முகமது ஆஷிக் (27), பரங்கிப்பேட்டை மாலிமாா் நகரைச் சோ்ந்த சையது இம்ரான் அகமது (32), அதே பகுதியைச் சோ்ந்த ஜியாவுல் இம்ரான் (26), சிதம்பரம் தொப்பையான் தெருவைச் சோ்ந்த நஜுமுதீன் (19), சிதம்பரம் கொள்ளுமேட்டு தெருவைச் சோ்ந்த அப்துல் ரகுமான் (19) ஆகிய 5 போ் மீது சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்தனா்.
