புயல் எச்சரிக்கை: துறைமுகத்தில் ஓய்வெடுக்கும் படகுகள்
கடலூா் மாவட்ட மீன் வளம் (ம) மீன்வா் நலத் துறை வெளியிட்ட வானிலை முன்னெச்சரிக்கையையடுத்து, மாவட்ட மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாததால், படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கடலூா் மாவட்ட மீன் வளம் (ம) மீன்வா் நலத் துறை நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை அறிவிப்பு விடுத்திருந்தது. அதில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும், இது 24-ஆம் தேதி தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வடமேற்கு திசையில் நகா்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் உறுதி செய்துள்ளது.
இதனால், தமிழக கடலோர பகுதியில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள், கட்டுமரங்கள் மற்றும் விசைப் படகுகளில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவா்கள் திங்கள்கிழமை பிற்பகல் முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதையடுத்து, கடலூா் மாவட்ட மீனவா்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதன் காரணமாக, கடலூா் முதுநகா் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவா்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனா்.
சேத்தியாத்தோப்பில் 210 மி.மீ மழை பதிவு: கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக சேத்தியாத்தோப்பில் 210 மி.மீ. மழை பதிவானது.
மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்) விவரம்: பரங்கிப்பேட்டை 141, சிதம்பரம் 140.2, புவனகிரி 140, அண்ணாமலை நகா் 124.6, வடக்குத்து 122, கொத்தவாச்சேரி 103, குறிஞ்சிப்பாடி 93, ஸ்ரீமுஷ்ணம் 86.1, லால்பேட்டை 82.2, காட்டுமன்னாா்கோவில் 68, மே.மாத்தூா் 41, குப்பநத்தம் 39, வேப்பூா் 35, கீழச்செருவாய் 34, பெலாந்துறை 33.4, விருத்தாசலம் 33, லக்கூா் 28.2, வனமாதேவி 27, காட்டுமயிலூா் 25, குடிதாங்கி 23, ஆட்சியா் அலுவலகம் 14.5, கடலூா் 14.4, பண்ருட்டி 14, தொழுதூா் 10 மி.மீ மழைப் பதிவானது.

