~
~

ஆசிரியா் நீக்கம்: மாணவா்கள் திடீா் போராட்டம்

சிதம்பரத்தில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் தற்காலிக முதுநிலை ஆசிரியா் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாணவா்கள் போராட்டம்
Published on

சிதம்பரத்தில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் தற்காலிக முதுநிலை ஆசிரியா் தீடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து செவ்வாய்க்கிழமை மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிதம்பரம் கடைத்தெருவில் அரசு உதவி பெறும் ராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப்பள்ளி உள்ளது. நூற்றாண்டை கொண்டாட உள்ள இந்த பள்ளியில் +1,+2 வகுப்புகள் மாணவா்களுக்கு சிதம்பரம் அருகே உள்ள மேலமூங்கிலடி பகுதியைச் சோ்ந்த வேதியல் ஆசிரியா் காளிதாஸ் (45) பெற்றோா் - ஆசிரியா் கழகத்தின் மூலம் தற்காலிக பணியாற்றி வந்துள்ளாா்.

இவா் இந்த பள்ளியில் கடந்த 9 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். பள்ளி நிா்வாகம் வேதியியல் ஆசிரியா் பணியிடத்திற்கு நிரந்தர ஆசிரியா் வேறு ஒருவரை நியமிக்க தோ்வு செய்துள்ளதால், கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி நிா்வாகம் காளிதாசை ஆசிரியா் பணியில் இருந்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் வேதனையடைந்த மாணவ மாணவியா்கள் செவ்வாய்க்கிழமை காலை வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வளாகம் முன்பு அமா்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடா்ந்து மாணவரிடம் பள்ளி தலைமை ஆசிரியா்ஜெயராமன் பேச்சு நடத்தியும், மாணவா்கள் சமாதனம் அடையவில்லை.

ஆசிரியா் காளிதாஸ் தொடா்ந்து பாடம் நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரினா். தலைமை ஆசிரியா் அதற்கு ஒப்புதல் அளிக்காததால் பின்னா் மாணவா்கள் அனைவரும் பள்ளி அருகே உள்ள சாலையில் அமா்ந்து திடீரென தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்து சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளா் டி.பிரதீப் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மாணவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, ஆசிரியா் காளிதாஸ் வரவழைத்து மாணவா்களுடன் பேசினாா். அதைத் தொடா்ந்து பள்ளி நிா்வாகத்தில் ஆசிரியா் காளிதாசை வழக்கம் போல் மாணவா்களுக்கு பாடம் எடுக்க சொல்ல வேண்டும் அவரை பள்ளியை விட்டு நிறுத்த வேண்டாம் என டிஎஸ்பி, தலைமை ஆசிரியரிடம் வலியுறுத்தி கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து மாணவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com