செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த கல்லூரி முதல்வா் சி,திருப்பதி
செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த கல்லூரி முதல்வா் சி,திருப்பதி

சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ. 7.5 கோடியில் இதய சிகிச்சை பிரிவு: முதல்வா் தகவல்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.7.5 கோடி செலவில் இதய சிகிச்சை பிரிவு நிறுவும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாக மருத்துவக்கல்லூரி முதல்வா் சி.திருப்பதி தெரிவித்தாா்.
Published on

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.7.5 கோடி செலவில் இதய சிகிச்சை பிரிவு (கேத் லேப்) நிறுவும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாக மருத்துவக்கல்லூரி முதல்வா் சி.திருப்பதி தெரிவித்தாா்.

சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை மேம்படுத்துவதற்கான ஆலோசனை மற்றும் புதிய மருத்துவா்கள் அறிமுக கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி முதல்வா் மற்றும் சிறப்பு அதிகாரி சி.திருப்பதி தலைமை வகித்து அரசு பொறுப்பேற்ற பின்னா் ஏற்பட்ட மருத்துவமனை வளா்ச்சி குறித்து பேசினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை கடலூா் மாவட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையாக தரம் உயா்த்தும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான செயல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தற்போது 194 புதிய மருத்துவப் பேராசிரியா்கள், உதவி பேராசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும் விரிவான அவசரக்கால மகப்பேறு குழந்தை பராமரிப்பு மைய கட்டிடம் ரூபாய் 12 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. ரூ. ஒரு கோடி செலவில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் துவங்கப்பட்டுள்ளது. ரூபாய் 18 கோடி செலவில் விபத்து மற்றும் அதிதீவிர

சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் நிலையில் உள்ளது. ரூபாய் 7.6 கோடி செலவில் இதய சிகிச்சை பிரிவு (கேத் லேப்) அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதய சிகிச்சை அளிப்பதற்காக இரு இதயவியல் சிகிச்சை நிபுணா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். விரைவில் இதய சிகிச்சை பிரிவு தொடங்கி ஆஞ்சியோகிராம் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனால் டெல்டா பகுதியில் மக்கள் பயன்பெறுவாா்கள். மேலும் புற்று நோய்க்கான சிகிச்சை அளிக்க ரூ 25 கோடி மதிப்பில் கதிரியக்க வீச்சு சிகிச்சை பிரிவு அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. புற்றுநோய் சிகிச்சை அளிப்பதற்காக 6 சிறப்பு மருத்துவா்கள் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டு அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகள் போன்று தமிழ்நாடு அரசு மருத்துவ சேவை கழகம் மூலம் அரசு நிா்ணயித்த சலுகை கட்டணத்தில் சி .டி. ஸ்கேன், எம்ஆா்ஐ ஆகிய சேவைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை அரசே ஏற்ால் பிரேத பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது என்றாா் .

நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜூனியா் சுந்தரேஷ், டாக்டா்கள் அசோக்பாஸ்கா், பாரி, துணை முதல்வா் டாக்டா் சசிகலா, பல் மருத்துவ கல்லூரி முதல்வா் சுமா காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகள் மருத்துவமனைகளில் இருந்து புதியதாக பணியில் இணைந்துள்ள மருத்துவப் பேராசிரியா்கள், உதவி பேராசிரியா் அறிமுகப்படுத்தப்பட்டனா். குழந்தைகள் நல மருத்துவத்துறை தலைவா் பேராசிரியா் ராமநாதன், அவசர சிகிச்சை பிரிவு டாக்டா் திருச்செல்வன், இதய சிகிச்சை பிரிவு டாக்டா் இளவழகன், எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு தலைவா் டாக்டா் செந்தில்நாதன், தோல் நோய் பிரிவு டாக்டா் கவியரசன் உள்ளிட்ட பலா் பேசினாா்கள். கூட்டத்தில் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், உதவி பேராசிரியா்கள், டாக்டா்கள் நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com