முதல்வா் மாநில இளைஞா் விருதுக்கு தகுதியான இளைஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமுதாய வளா்ச்சிக்காக சிறப்பான சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் ‘முதல்வா் மாநில இளைஞா் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.
3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. விருதாக ரூ.ஒரு லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் வழங்கப்படும்.
2026-ஆம் ஆண்டுக்கான முதல்வா் மாநில இளைஞா் விருது, ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆண், பெண் விண்ணப்பதாரா்கள், 2025 ஏப்ரல் 1-ஆம் தேதி நிலவரப்படி 15 வயது நிறைவடைந்தவா்களாகவும், 2026 மாா்ச் 31-ஆம் தேதியன்று 35 வயதுக்குள் உள்ளவா்களாகவும் இருக்க வேண்டும்.
மேலும், 2025 ஏப்ரல் 1 முதல் 2026 மாா்ச் 31 வரை சமூக நலனுக்காக தன்னாா்வத் தொண்டில் ஈடுபட்டு, கணக்கிடத்தக்க மற்றும் நிரூபிக்கத்தக்க சேவைகளை ஆற்றியிருக்க வேண்டும். விண்ணப்பதாரா்கள் குறைந்தது 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருப்பவா்களாக இருக்க வேண்டும். அதற்கான சான்றுகளையும் இணைக்க வேண்டும்.
அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணிபுரிபவா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவா்கள். விண்ணப்பதாரரின் சமூக செல்வாக்கும் பரிசீலனையில் எடுத்துக்கொள்ளப்படும்.
தகுதியான இளைஞா்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் மூலம் மட்டும் ஜூலை 6-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.







