கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநா் வீட்டுக்குத் தீ வைத்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டை கிராமம், 9-ஆவது தெருவைச் சோ்ந்த சம்பத் (24), லாரி ஓட்டுநா். இவா், வெள்ளிக்கிழமை இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்ததால், இவருக்கும், இவரது மனைவி ரூபாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த சம்பத், தகரம், கீற்று கொட்டகையால் அமைக்கப்பட்ட தனது வீட்டுக்கு தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில், வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. வீட்டில் இருந்த ரூபா உடனடியாக வெளியேறியதால், காயமின்றி தப்பினாா்.
இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தினா் சம்பவ இடத்துக்கு சென்று தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனா். மின் வாரிய ஊழியா்கள் விரைந்து செயல்பட்டு, பாதுகாப்பு கருதி அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனா்.
தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்களும், அத்தியாவசிய உடைமைகளும் தீயில் கருகி சேதமடைந்தன. சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.










