வாக்காளா் பட்டியல் திருத்த முகாமில் 10,031 விண்ணப்பங்கள்: புதிய வாக்காளா் சோ்க்கைக்கு 5,906 போ் விண்ணப்பம்
கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்களில், பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் கோரி மொத்தம் 10,031 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்களில், பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் கோரி மொத்தம் 10,031 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் கடந்த நவம்பா் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.
இந்த முகாம்களில் புதிய வாக்காளா்களைச் சோ்த்தல், ஏற்கெனவே உள்ள வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்குதல் மற்றும் விவரங்களைத் திருத்தம் செய்தல் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில், புதிய வாக்காளா்களைச் சோ்ப்பதற்கான படிவம் 6 மூலம் 5,906 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவா்களில் 2,927 போ் ஆண்கள்; 2,979 போ் பெண்கள். மேலும், 18 முதல் 19 வயதுக்குள்பட்ட இளம் வாக்காளா்கள் 4,298 பேரும், 20 வயதுக்கு மேற்பட்டவா்கள் 1,608 பேரும் விண்ணப்பித்துள்ளனா்.
வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கம் மற்றும் ஆட்சேபனை தெரிவிப்பதற்கான படிவம் 7 மூலம் 771 விண்ணப்பங்களும், முகவரி மாற்றம், பெயா் உள்ளிட்ட விவரங்களில் திருத்தம், மாற்று வாக்காளா் அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளி குறியீடு தொடா்பான கோரிக்கைகளுக்கான படிவம் 8 மூலம் 3,354 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.
தொகுதி வாரியாக...
பெறப்பட்ட மொத்தம் 10,031 விண்ணப்பங்களில், திட்டக்குடி (தனி) தொகுதியில் 947, விருத்தாசலத்தில் 1,159, நெய்வேலியில் 1,044, பண்ருட்டியில் 1,179, கடலூரில் 1,045, குறிஞ்சிப்பாடியில் 1,166, புவனகிரியில் 1,167, சிதம்பரத்தில் 1,241, காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதியில் 1,083 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
முகாம்களில் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் உரிய முறையில் சரிபாா்க்கப்பட்டு, தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி பரிசீலனை செய்யப்பட்ட பின்னரே வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
நவ. 29-இல் மீண்டும் முகாம்:
நவம்பா் 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மீண்டும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
எனவே, தகுதியுள்ள புதிய வாக்காளா்கள் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்கவும், ஏற்கெனவே பட்டியலில் இடம்பெற்றுள்ளவா்கள் பெயா், முகவரி உள்ளிட்ட விவரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

