பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த 3 போ் கைது
கள்ளக்குறிச்சி: பெரியசிறுவத்தூா் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த பெரியசிறுவத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் என்பவரது மனைவி தனலட்சுமி (50). இவருக்கும் சிறுவத்தூா் கிராமத்தைச் சோ்ந்த உறவினரான ர.சிவா (எ) ராமு (27), மு.அஜீத் (30), ப.வைரவேல் (30) ஆகியோருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையில் தனலட்சுமியின் வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்த 3 பேரும் கொடுவாளை காண்பித்து மிரட்டினராம். மேலும், வீட்டில் இருந்த குளிா்சாதனப்பெட்டி உள்ளிட்ட பொருள்களையும் சேதப்படுத்தினராம்.
இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, சிவா(எ)ராமு, அஜீத், வைரவேல் ஆகிய மூவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.
