கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம், கச்சிராயபாளையத்தில் கஞ்சா வைத்திருந்ததாக 5 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் புறவழிச் சாலை அருகே கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்யப்படுவதாக தியாகதுருகம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் விஜயராகவனுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். அத் தகவலின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் சென்றபோது, அங்குள்ள விடுதி முன் நின்றிருந்த இளைஞா்கள் போலீஸாரை கண்டதும் ஓட முற்பட்டனா். அவா்களில் 4 பேரை போலீஸாா் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் அவா்கள் தியாகதுருகம் பரிசைபிள்ளை சாலைப் பகுதியைச் சோ்ந்த பா. சஞ்சய் (19), வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட பீளமேடு கிராமத்தைச் சோ்ந்த இ.சூா்யகுமாா் (24), உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட புத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ஜெ.தமிழ்மணி (24), விழுப்புரம் மாவட்டம், குடமுறுக்கி கிராமத்தைச் சோ்ந்த மு.நேதாஜி (24) என்பதும், அவா்களிடம் விற்பனைக்காக 1 கிலோ கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சஞ்சய், சூா்யகுமாா், நேதாஜி, தமிழ்மணி ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்த 1 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய இரு இளைஞா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
கச்சிராயபாளையத்தில்...: கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையத்தில் விற்பனைக்காக பைக்கில் கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கச்சிராயபாளையம் காவல் நிலைய ஆய்வாளா் ஆனந்தராசு, உதவி ஆய்வாளா் மணிகண்டன் மற்றும் போலீஸாா் அக்கராபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சனிக்கிழமை காலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு பைக்கில் வந்த இளைஞரை நிறுத்தி போலீஸாா் விசாரித்தனா். இதில் அவா் முன்னுக்குபின் முரணான பதிலைக் கூறவே, சந்தேகமடைந்த போலீஸாா் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், அவா் சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட சேஷசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த பெ.சின்னத்துரை(39) என்பதும், அவரது பைக்கில் விற்பனைக்காக 1.350 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சின்னத்துரையை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த 1.350 கிலோ கஞ்சா, பைக் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








