கலை, இலக்கிய ஆராய்ச்சிகள் பெருக வேண்டும் என்று பாரதிதாசனின் பேரனும், கவிஞருமான கோ.பாரதி வலியுறுத்தினார்.
பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் புதுச்சேரி பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாவேந்தர் கலை, இலக்கிய திங்கள் விழாவில் தமிழ்தாத்தா உ.வே.சாமிநாதரும், பாவேந்தரும் என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:
புதுச்சேரியில் இயங்கி வரும் அருங்காட்சியகங்களில் உள்ள நூலகங்களில் ஆயிரக்கணக்கான அரிய நூல்கள் உள்ளன. கலை, இலக்கிய, வரலாற்று பெருமை கொண்ட புதுச்சேரியில் அவை தொடர்பான கலை இலக்கிய ஆராய்ச்சிகள் பெருக வேண்டும். இதில் உள்ள தடைகள், பிற்போக்கு நிலைகள் நீங்க வேண்டும். தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதர் அயராமல் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டார். தமிழ் இனத்துக்கு மொழியாலும், தன் திறமையாலும் பெண் இனத்துக்கு பெருமை சேர்த்தார் கவிக்குயில் சரோஜினிதேவி. இவர்களை முன்னோடிகளாக நாம் கொள்ள வேண்டும் என்றார்.
எழுத்தாளர் தமிழ்மாமணி மன்னர் மன்னன் முன்னிலை வகித்தார். கவிஞர் தி.கோவிந்தராசு காலத்தை வென்ற கவிக்குயில் சரோஜினிதேவி என்ற தலைப்பிலும், பாவேந்தர் இலக்கிய வரிசையில் சிறுவர், சிறுமியர் தேசிய கீதம் என்ற பாவேந்தரின் நூல் குறித்து காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய தமிழ்த்துறை தலைவர் பேராசிரியை அவ்வை நிர்மலாவும் பேசினர்.
விழாவில் கவிஞர்கள் விக்டர் நிக்கோலாஸ், இராஜ.முருகையன் ஆகியோர் இலக்கியத் தொண்டுகளுக்காக பாராட்டப்பட்டனர். அன்பை வளர்த்திடுவாய் என்னும் கவிதை வரிக்கு 37 கவிஞர்கள் கவிதை வாசித்தனர். படைப்பாளி பைரவி, கலைமாமணி செல்லத்துரை நீஸ், ச.உமாபதி, வை.ஆறுமுகம், கு.சத்தியமூர்த்தி, ஜெ.வள்ளி ஆகியோர் ஒருங்கிணைப்புப் பணியை செய்தனர்.
நிறைவில் வைத்தி.கஸ்தூரி நன்றி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.