இன உணர்வு இருந்தால்தான் மொழியைப் பாதுகாக்க முடியும்: பழ.நெடுமாறன்
இன உணர்வு இருந்தால் மட்டுமே மொழியைப் பாதுகாக்க முடியும் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.


இன உணர்வு இருந்தால் மட்டுமே மொழியைப் பாதுகாக்க முடியும் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
புதுவை தமிழ்ச் சங்கத்தில் தமிழர் தேசிய முன்னணியின் புதுச்சேரி மாநில கிளை சார்பில் புதன்கிழமை மாலை நடைபெற்ற உலகத் தாய்மொழி தின விழாவில் அவர் பேசியதாவது:
1956-ஆம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை மாநில அரசுகளுக்கான அதிகாரங்கள் முழுமையாக மறுக்கப்பட்டு வருகின்றன. மத்தியில் அதிகாரத்தை குவித்துக்கொண்டே போகின்றனர். மத்திய அரசிடம் அதிகாரம் குவிந்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் இனப் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதே மாநிலங்களுக்கான முழு அதிகாரத்தை ஒப்படைத்திருக்க வேண்டும்.
மத்தியில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும் அதிகாரக் குவிப்பு, மாநிலங்களின் உரிமை பறிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதேபோன்ற நடைமுறையை பாஜக அரசும் கையாண்டு வருகிறது. கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து மத்தியப் பட்டியலுக்கு மாற்றி அதிகாரம் செலுத்துகின்றனர்.
மதம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் சார்ந்த விஷயம். ஆனால், மத வேறுபாடுகளைக் காட்டி ஒரே தேசிய இனத்துக்குள் வேற்றுமையை ஏற்படுத்தக் கூடாது. மதத்தின் பெயரால் பிளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வடமொழி (சம்ஸ்கிருதம்) பண்பாட்டு படையெடுப்பு தற்போதும் தொடர்கிறது. ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால் முழு பலத்தோடு வடமொழியைத் திணிக்கின்றனர். இதற்கு எதிராக மக்கள் போராட வேண்டும். தொல்காப்பியர் காலம் முதல் இதுவரை எழுத்து வடிவில் சில மாற்றங்கள் ஏற்பட்டாலும், தமிழ் மொழியில் அடிப்படை விஷயங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.
120 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் 14, 200 பேர் மட்டுமே சம்ஸ்கிருத மொழியைப் பேசவும், எழுதவும் தெரிந்து வைத்துள்ளனர். பண்டைய சீன மொழி இப்போது இல்லை. ஆனால், தமிழ்மொழி தற்போதும் இளைமையுடன் உள்ளது.
தமிழ் மொழியைக் காக்க இன உணர்வு வேண்டும். இன உணர்வு இருந்தால் மட்டுமே மொழியைக் காக்க முடியும் என்றார் அவர்.
விழாவில், துரை.மாலிறையன் எழுதிய தமிழ் எழுச்சி வெண்பா மாலை, தமிழர் எழுச்சி அம்மானை ஆகிய நூல்களை அவர் வெளியிட்டார். தமிழர் தேசிய முன்னணியின் புதுச்சேரி செயலர்கள் இரா.இளமுருகன், ப.திருநாவுக்கரசு, தலைவர் துரை.மாலிறையன், துணைத் தலைவர்கள் சு.வேல்முருகன், அ.உசேன், மதி.தேவகி ஆனந்த், செயற்குழு உறுப்பினர் தரும.ரத்தினவேலு, சி.பெருந்தேவன், சிவ.இளங்கோவன் உள்படப் பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...