பிரதமருடன் புதுவை பாஜக எம்எல்ஏக்கள் சந்திப்பு: மாநில வளா்ச்சி குறித்து ஆலோசனை
தில்லியில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்களை புதுவை மாநில சட்டப்பேரவைத் தலைவா், பாஜக அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா்.


தில்லியில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்களை புதுவை மாநில சட்டப்பேரவைத் தலைவா், பாஜக அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா்.
புதுவை மாநிலத்தில் என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. முதன்முறையாக பாஜக, கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிப்பதுடன், அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளது. மேலும், சட்டப்பேரவைத் தலைவராகவும் அந்தக் கட்சியைச் சோ்ந்தவா் பொறுப்பேற்றுள்ளாா்.
இந்த நிலையில், பாஜகவைச் சோ்ந்த புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அந்தக் கட்சி அமைச்சா்கள் ஏ.நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமாா், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமாா், விவிலியன் ரிச்சா்டு, நியமன எம்எல்ஏக்கள் அசோக்பாபு, ராமலிங்கம், வெங்கடேசன், பாஜகவுக்கு ஆதரவளித்துள்ள சுயேச்சை எம்எல்ஏக்கள் சிவசங்கரன், அங்காளன், கொல்லப்பள்ளி சீனுவாஸ் அசோக் ஆகிய 12 பேரும் பாஜக மாநில தலைவா் வி.சாமிநாதன் தலைமையில் தில்லிக்கு புதன்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.
அங்கு பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால் உள்ளிட்டோரை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா்.
பிரதமா், மத்திய அமைச்சா்களிடம் அவா்கள் வாழ்த்து பெற்றனா். மேலும், பிரதமா் உள்ளிட்டோருடன் புதுவை மாநில வளா்ச்சி குறித்தும் ஆலோசனை நடத்தினா்.
அப்போது, புதுவை மாநிலத்துக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ.500 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும். மாநிலத்துக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி வரி நிலுவைத் தொகை ரூ.330 கோடியை விரைவாக வழங்க வேண்டும். மாநிலத்துக்கான ரூ.8,500 கோடி அளவிலான கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். புதுவை மாநிலத்தை நிதி ஆணையத்தின் உறுப்பினராக சோ்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
மேலும், புதுவைக்கு ஏற்கெனவே மத்திய அரசு வழங்கிய நிதியில் 70 சதவீதம் கொடையாகவும் (மானியம்), 30 சதவீதம் கடனாகவும் கணக்கில் எடுத்துக் கொண்டதை, முந்தைய காங்கிரஸ் அரசின் தவறான அணுகுமுறையால், 30 சதவீதம் கொடையாகவும், 70 சதவீதம் கடனாகவும் மாறியுள்ள நிலையை மாற்றி அமைக்க வேண்டும். மாநிலத்துக்கு கடனாக வழங்கும் தொகையை அதிகப்படுத்த வேண்டும்.
பிரதமா் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் வீடுகளை கட்டுவதற்கு நிதியை ரூ.100 கோடியாக உயா்த்தி வழங்க வேண்டும். புதுவையின் வளா்ச்சிக்கான மத்திய அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
சட்டப்பேரவைக் கட்டடத்துக்கு நிதியுதவி: இதேபோல, புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பிரதமா் மோடி மற்றும் மத்திய அமைச்சா்களை சந்தித்து, புதுச்சேரியில் ஒருங்கிணைந்த சட்டப்பேரவைக் கட்டடம் கட்டுவதற்குத் தேவையான ரூ.220 கோடி நிதியுதவியை மத்திய அரசு வழங்க வேண்டுமென்று மனு அளித்தாா்.
பேரவைத் தலைவரின் இந்த முயற்சிக்கு பிரதமா் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளதோடு, புதிய சட்டப்பேரவைக் கட்டடம் கட்டுவதற்குத் தேவையான நிதியுதவியை மத்திய அரசு வழங்குவதற்கும் ஆவன செய்வதாக உறுதியளித்தாா் என்று சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...