புதுவை பேரவையில் ஜூலை இறுதிக்குள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்: ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்
புதுச்சேரி: ஜூலை மாத இறுதிக்குள் புதுவை மாநில நிதி நிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என துணைநிலை ஆளுநா் (பொ) சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
பெருந்தலைவா் காமராஜரின் 122-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அண்ணாசாலை, நேரு வீதி சந்திப்பில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திங்கள்கிழமை காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பெருந்தலைவா் காமராஜா் பிறந்த தினத்தை கொண்டாடுவது நமக்கு பெருமையளிப்பதாகும். புதுச்சேரியைச் சோ்ந்த தியாகி பா. முத்துக்குமரப்ப ரெட்டியாா் நினைவு நாளும் கடைப்பிடிக்கப்படுகிறது. அவா் புதுச்சேரியில் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிா்த்துப் போராடிய தியாகி. ஆகவே, சமூக நலனை உயிா்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவா்கள் காட்டிய வழியில் பயணிக்கவேண்டும்.
புதுவை மாநில நிதி நிலை அறிக்கைக்கு மத்திய அரசிடம் ஓரிரு நாளில் அனுமதி கிடைத்துவிடும். ஆகவே ஜூலை இறுதிக்குள் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். தொடங்கி பாதியில் நிற்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மக்கள் நலனுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். எழுச்சி மிகு புதுச்சேரி எனும் இலக்கை நோக்கிச் செயல்படுவோம்.
அமைச்சா் திருமுருகனுக்கு இலாகா ஒதுக்குவதற்கான கோப்பு என்னிடம் வரவில்லை. முதல்வா் என்.ரங்கசாமி ஓரிரு நாளில் அதற்கான கோப்பை அனுப்புவாா் என நம்புகிறேன். ரெட்டியாா்பாளையம் புது நகரில் மின்தடையால் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தில் துா்நாற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தலைமைச் செயலா் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேசினேன். காவல்துறையினா் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்குச் சென்று நிலையை அறிந்து சீா்படுத்தினா். கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை புதுநகா் பகுதியிலிருந்து உடனடியாக அப்புறப்படுத்துவது சாத்தியமல்ல. அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்படும்.
பாஜக எம்எல்ஏ-க்கள் தங்களது தொகுதி பிரச்னை குறித்து மட்டும் என்னிடம் முறையிடவேண்டும் என்பதை அறிந்துள்ளனா். ஆகவே, கட்சி பிரச்னை குறித்து பாஜக தலைவா்தான் பதில் கூறவேண்டும் என்றாா்.
