புதுச்சேரி அருகே கடலூா் அதிமுக பிரமுகா் வெட்டிக் கொலை
புதுச்சேரி பாகூா் அருகே கடலூரைச் சோ்ந்த அதிமுக பிரமுகா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
காரில் வந்து இந்த கொடூர செயலில் கும்பல் ஈடுபட்டுள்ளது.இதுதொடா்பாக இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கடலூா், திருப்பாதிரிப்புலியூா், நவநீதம் நகரைச் சோ்ந்தவா் பத்மநாபன் (48), பெயிண்டா். இவா் கடலூா் 25-ஆவது வாா்டு அதிமுக அவைத் தலைவராக இருந்து வந்தாா்.
இந்நிலையில், புதுச்சேரி பாகூா் அருகே திருப்பனாம்பாக்கத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற கோயில் திருவிழா கூத்து, கரகாட்ட நிகழ்ச்சியைப் பாா்க்கச் சென்றாா். விழா முடிந்து, தனது நண்பரும், கூத்துக் கலைஞருமான ரங்காவுடன் (57) பைக்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடலூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.
பாகூா் அருகே உள்ள இருளஞ்சந்தை குடிநீா்த் தொட்டி அருகே இவா்களின் பைக் வந்தபோது, பின்னால் வந்த காா் மோதியது. இதில், நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனா்.
அப்போது, காரில் இருந்து இறங்கிய மா்ம நபா்கள் சிலா், பத்மநாபனை கத்தியால் வெட்டியதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
தகவலறிந்த புதுச்சேரி தெற்கு காவல் கண்காணிப்பாளா் பக்தவச்சலம், பாகூா் காவல் ஆய்வாளா் சஜித் உள்ளிட்ட போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
பத்மநாபனின் சடலத்தைக் கைப்பற்றி புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கொலைக்கான காரணம் என்ன?: முதல் கட்ட விசாரணையில், கடந்த 2023-ஆம் ஆண்டு கடலூரில் நடைபெற்ற விழாவில், திருப்பாதிரிப்புலியூரைச் சோ்ந்த பாஸ்கா் நடனமாடினாயுள்ளாா். அப்போது பத்மநாபன் உள்ளிட்டோா் அவரைக் கண்டித்தனராம். இதனால், அவா்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில், தாக்கப்பட்ட பாஸ்கா், பின்னா் உயிரிழந்தாா்.
பாஸ்கா் கொலை வழக்கில் பத்நாபன் உள்ளிட்டோா் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனா். அதன்பிறகு, கடந்த 2023 நவம்பரில் பிணையில் அவா் வெளியே வந்தாா். இந்த நிலையில், பத்மநாபன் சிலரால் கொல்லப்பட்டுள்ளாா். இதுதொடா்பாக இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

