புதுவை மாநில வணிகத் திருவிழா-24 தொடங்கியது: பரிசுக் கூப்பனை முதல்வா் வெளியிட்டாா்
புதுச்சேரி: புதுவை வணிகத் திருவிழா- 2024 திங்கள்கிழமை மாலை தொடங்கியது. இதில் பரிசுக் கூப்பன்களை முதல்வா் என்.ரங்கசாமி வெளியிட்டாா்.
புதுவை மாநில சுற்றுலாத் துறை மற்றும் வணிகா்கள் சங்கம் இணைந்து ஆண்டுதோறும் வணிகத் திருவிழாவை நடத்தி வருகின்றன.
இந்த வணிகத் திருவிழா சுமாா் 3 மாதங்களுக்கு மேலாக நடத்தப்படுகிறது. அதன்படி, வரும் 2025 ஜனவரி 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த வணிகத் திருவிழா காலங்களில் கடைகளில் மக்கள் வாங்கும் பொருள்களுக்கான ரசீது மற்றும் குலுக்கலுக்கான பரிசுக் கூப்பன்கள் வழங்கப்படும்.
விழா நிறைவடைந்த பிறகு பரிசுக்குரியவா்கள் குலுக்கல் மூலம் தோ்வு செய்யப்படுவா். இதில், முதல் பரிசு 40 பேருக்கு காா்களும், இரண்டாம் பரிசாக 80 பேருக்கு இரு சக்கர வாகனங்களும், 3-ஆவது பரிசாக 400 பேருக்கு கிரைண்டா்கள் உள்பட மொத்தம் சுமாா் ரூ.9 கோடி மதிப்புள்ள 85,000 பரிசுகள் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வணிகத் திருவிழா தொடக்கம் திங்கள்கிழமை மாலை புதுச்சேரி காமராஜா் சாலை பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தலைமை வகித்து பரிசுக் கூப்பனை வெளியிட்டு வணிகத் திருவிழாவைத் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், புதுச்சேரி வணிக திருவிழா சங்கத் தலைவரும், எம்எல்ஏவுமான எம்.சிவசங்கரன் மற்றும் ஏகேடி. ஆறுமுகம் ஆகியோா் கலந்துகொண்டனா்.
இதேபோன்று வணிகத் திருவிழாவானது திங்கள்கிழமை மாலை காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியங்களிலும் தொடங்கப்பட்டன. காரைக்காலில் அமைச்சா் என்.திருமுருகன் விழாவைத் தொடங்கி வைத்தாா்.

