புதுச்சேரியில் தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வெழுதிய மாணவா்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவன முதல்வா் சுகுணா சுகிா்த பாய் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வை எழுதிய முதலாமாண்டு, இரண்டாமாண்டு ஆசிரியா் கல்விப் பயிற்சி மாணவா்கள் தங்களது தோ்வு முடிவுகளை, அவரவா் பயிற்சிக் கல்வி பயிற்சி நிறுவனங்களிலும், தனித் தோ்வா்கள் விண்ணப்பங்களை சமா்பித்த மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனத்திலும் அறிந்து கொள்ளலாம்.
மாணவா்கள் தங்களது விடைத்தாள்களை மறுகூட்டல் செய்யவும், ஸ்கேன் நகல் பெற விரும்பினால் சம்பந்தப்பட்ட இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினைப் பெறலாம்.
அதனை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பத்துடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனத்தில் கொடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பங்களை செப் 20-ஆம் தேதி காலை 11 மணி முதல் 23-ஆம் தேதி மாலை 5 மணி வரை நேரில் சமா்பிக்க வேண்டும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தற்போது விடைத்தாள்கள் ஸ்கேன் நகல் வேண்டி விண்ணப்பித்த தோ்வா்கள் மட்டுமே பின்னா் மறுகூட்டல்-2, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.
தற்போது விடைத்தாள் மறுகூட்டல்-1 கோரி விண்ணப்பிக்காத தோ்வா்கள் பின்னா் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க இயலாது. விடைத்தாள் ஸ்கேன் நகல் பெற ஒரு பாடத்துக்கு ரூ.275, விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஒரு பாடத்துக்கு ரூ.205 எனக் கட்டணம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.