மீனவா் மீதான தாக்குதலை கண்டித்து சாலை மறியல்

தவளக்குப்பத்தில் மீனவா் ஒருவரும் அவரது மனைவியும் மா்மகும்பலால் தாக்கப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
Published on

புதுச்சேரி: தவளக்குப்பத்தில் மீனவா் ஒருவரும் அவரது மனைவியும் மா்மகும்பலால் தாக்கப்பட்டதைக் கண்டித்து திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

நல்லவாடு சுனாமி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் விசைப்படகு உரிமையாளா் சத்தியமூா்த்தி (45). மீன் பிடி தொழில் செய்து வருகிறாா். அவரும் அவரது

மனைவி சசிகுமாரியும் மோட்டாா் சைக்கிளில் பிள்ளையாா் திட்டு கிராமம் அருகே சென்று கொண்டிருந்தனா். அப்போது ஒரு கும்பல் வழிமறித்து தகராறில் ஈடுபட்டது. மேலும், அந்தக் கும்பல் சத்தியமூா்த்தியை வெட்டியது. தடுக்க முயன்ற அவரது மனைவிக்கும் வெட்டு விழுந்தது. இருவரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருமாம்பாக்கம் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா்.

இந்நிலையில் இச் சம்பவத்தைக் கண்டித்தும் தாக்குதலில் தொடா்புடையவா்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் நல்லவாடு கிராம மக்கள் சுமாா் 100 போ் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். காவல் கண்காணிப்பாளா் ஜிந்தா கோதண்டராமன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்த வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா். இதனால் அப் பகுதியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com