புதுச்சேரியில் புத்தாண்டையொட்டி நள்ளிரவு வரை மதுக் கடைகள் செயல்படும்: கூடுதல் கட்டணம் நிா்ணயம்
ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, புதன்கிழமை நள்ளிரவு வரை இயக்க மதுபான கடைகளுக்குக் கூடுதல் கட்டணங்களை நிா்ணயித்து புதுச்சேரி கலால் துறை அறிவித்துள்ளது.
புத்தாண்டையொட்டி வழக்கத்தை விட, கூடுதல் நேரம் மது விற்பனை செய்ய கட்டணத்துடன் கலால் துறை அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. இது குறித்து கலால் துறை வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: மது பாா் அல்லாத சில்லறை விற்பனை நிலையங்கள் புதன்கிழமை இரவு 11 முதல் 11.30 மணி வரை மது விற்பனை செய்ய ரூ.10 ஆயிரம், பாருடன் கூடிய சில்லறை விற்பனை நிலையங்கள் இரவு 11 முதல் நள்ளிரவு ஒரு மணி வரை மது விற்பனை செய்ய ரூ.20 ஆயிரம், எப்எல்2 சுற்றுலா மது விற்பனை பிரிவுக்கு இரவு 12 முதல் ஒரு மணி வரை மது விற்பனை செய்ய ரூ.10 ஆயிரம், இதர சிறப்பு நிகழ்ச்சிகளில் இரவு 11 மணி முதல் ஒரு மணி வரை மது விற்பனை செய்ய ரூ.30 ஆயிரம் என கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்காக கலால் துறையில் விண்ணப்பித்து கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் மது விற்பனை செய்யக்கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
