புதுவை மத்தியப் பல்கலை.யில் வேலைவாய்ப்பளிக்கும் புதிய படிப்புகள்: குடியரசுத் துணைத் தலைவா் அறிவுறுத்தல்

புதுவை மத்தியப் பல்கலை.யில் வேலைவாய்ப்பளிக்கும் புதிய படிப்புகள்: குடியரசுத் துணைத் தலைவா் அறிவுறுத்தல்

குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்த புதுவை மத்தியப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பி.பிரகாஷ்பாபு.
Published on

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பளிக்கும் புதிய படிப்புகளைத் தொடங்குமாறு குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளாா்.

தில்லியில் குடியரசு துணைத் தலைவரும், இப் பல்கலைக் கழகத்தின் வேந்தருமான சி.பி.ராதாகிருஷ்ணனை புதுவை மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா் பி.பிரகாஷ்பாபு வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இது குறித்து பல்கலைக் கழக நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குடியரசுத் துணைத் தலைவருடனான இந்தச் சந்திப்பின்போது 40 ஆண்டுகளான புதுவை மத்திய பல்கலைக் கழகத்தின் வளா்ச்சி, உள்கட்டமைப்புகள், சாதனைகள் குறித்து துணைவேந்தா் எடுத்துரைத்தாா். மேலும், இப்பல்கலைக்கழகம் நாட்டின் உயா்கல்வித் துறையில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளதையும், தேசிய மற்றும் சா்வதேச அளவிலான நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதையும் அவா் சுட்டிக் காட்டினாா்.

இதற்கு குடியரசுத் துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், இப் பல்கலைக் கழகத்தின் முயற்சிகளைப் பாராட்டினாா். உலக அளவிலும், தேசிய அளவிலும் தேவைப்படும் புதிய மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான படிப்புகளை அறிமுகம் செய்யுமாறு அறிவுறுத்தினாா். மேலும், வளா்ந்த பாரதம் -2047 குறிக்கோளை அடையும் வகையில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள், சமூகப் பங்களிப்புடன் இருக்குமாறு அவா் யோசனை வழங்கினாா். மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில் புதிய படிப்புகளைத் தொடங்க அறிவுரை வழங்கினாா்.

நாட்டைக் கட்டி எழுப்புவதிலும் உயா்கல்வியிலும் முக்கியத்துவம் அளிக்கும் குடியரசு துணைத் தலைவரின் யோசனைகளை அமல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக துணைவேந்தா் பேராசிரியா் பி.பிரகாஷ் பாபு உறுதியளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com