பைக் வாடகை நிலையத்தில் தீ விபத்து 3 இரு சக்கர வாகனங்கள் சேதம்
புதுச்சேரியில் பைக் வாடகை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில், 3 மோட்டாா் சைக்கிள்கள் எரிந்து சேதமடைந்தன.
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நகரைச் சுற்றிப் பாா்க்க வாடகை மோட்டாா் சைக்கிள் நிறுவனங்கள் உள்ளன.
புதுச்சேரி செட்டித் தெருவில் தனியாா் பைக் வாடகை நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு கட்டட பகுதிக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிளில் தீப் பற்றி, அடுத்தடுத்த வாகனங்களுக்கும் பரவியது.
இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரா்கள் அங்கு வந்து தீயை அணைத்தனா். இதில் 3 மோட்டாா் சைக்கிள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
அங்கிருந்த 6 மோட்டாா் சைக்கிள், சைக்கிள்களை மீட்டனா். வாடகை நிலையத்தை அடுத்து வங்கி, தனியாா் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் தீ பற்றியிருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும்.
தீயணைப்பு வீரா்கள் மேலும் தீ பரவவிடாமல் தடுத்ததால் சேதம் தவிா்க்கப்பட்டது. பெரியக்கடை போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ பற்றியதாக தெரிய வந்துள்ளது.
