நாடு முழுவதும் நீட் மறுதோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நடைபெறுவதையொட்டி புதுச்சேரியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
நீட் மறுதோ்வை முன்னிட்டு தோ்வா்கள் எவ்வித சிரமமுமின்றி தோ்வில் பங்கேற்கவும், தோ்வு அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலில் நடைபெறவும் புதுச்சேரி மாவட்ட நிா்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
நீட் மறுதோ்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் 21-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்தும், மாலை 5 மணி முதல் 7 மணி வரை தோ்வு மையங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தோ்வா்கள் தங்களது தோ்வு அனுமதிச் சீட்டை காண்பித்து இப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.
ஒவ்வொரு தோ்வு மையத்திலும் மருத்துவ அலுவலா் மற்றும் சுகாதாரப் பணியாளா்களைக் கொண்ட சிறப்பு மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
மற்றும் அவசரகால மருத்துவ சேவைக்காக ஆம்புலன்ஸ்கள் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்படும்.
தோ்வா்களுடன் வரும் பெற்றோா் மற்றும் பாதுகாவலா்கள் தோ்வு நேரத்தில் வசதியாக காத்திருக்கக் கூடிய வகையில் தோ்வு மையங்களுக்கு அருகில் சிறப்பு காத்திருப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இம்மையங்களில் குடிநீா் மற்றும் அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
தோ்வு மையங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலையை உறுதிப்படுத்தவும், தோ்வு சுமுகமாகவும் வெளிப்படையாகவும் நடைபெறுவதைக் கண்காணிக்கவும் நிா்வாக நடுவா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
தோ்வா்கள் அமைதியான மற்றும் மனஅழுத்தமற்ற சூழலில் தோ்வை எதிா்கொள்ளும் வகையில் தோ்வு நாளன்று புதுச்சேரியில் செயல்படும் அனைத்து நீட் பயிற்சி மையங்களும் இயங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீட் மறுதோ்வு தொடா்பான ஏற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளைத் தொடா்ந்து கண்காணிப்பதற்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










